SuperTopAds

சீனாவின் AI துறை நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 40% வரை வீழ்ச்சி!

ஆசிரியர் - Editor IV
சீனாவின் AI துறை நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 40% வரை வீழ்ச்சி!

சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குறைகடத்தி  துறைகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பங்குகள், நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 40% வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

இதனால் அந்த நாட்டின் பிரதான STAR50 பங்குச் சந்தைக் குறியீடும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்த வீழ்ச்சியின் காரணமாக சுமார் 480 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சந்தை மூலதனம் இழக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள உலகளாவிய சந்தைக்கு இது ஒரு பாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

AI துறையின் வளர்ச்சிக்காக சீன முதலீட்டாளர்களின் சேமிப்பை பங்குச் சந்தையை நோக்கி ஈர்ப்பதற்கு சீனா மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு இது பெரும் தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார தூண்டுதல் வாக்குறுதிகள் காரணமாக வேகமாக உயர்ந்த பங்குகளின் விலை சரிந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவிய வளர்ச்சி முடங்கியுள்ளது.

சீனாவின் பிரதான 'Blue-chip' குறியீடும் கடந்த ஜூன் மாத உச்சத்தில் இருந்து சுமார் 20% வீழ்ச்சியடைந்துள்ளது.

நேரடி காரணங்கள் எதுவும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதிகப்படியான பங்குகள் விலை, வரிச் சுமை மற்றும் தரவு மையங்களில் (Data centres) சீன சாதனங்களைத் தடை செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுக்கும் அச்சுறுத்தல்களே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

'Goldman Sachs' நிறுவனத்தின் தரவுகளின்படி, சீனாவின் சந்தை மூலதனத்தில் 42 சதவீதத்தையும், பிரதான A-பங்குகள் மற்றும் ஹொங்கொங் H-பங்குகளின் விற்றுமுதல் தொகையில் 57 சதவீதத்தையும் AI பங்குகளே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இதனால், சிறு முதலீட்டாளர்கள் அதிகம் உள்ள இச்சந்தையில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Radio