SuperTopAds

டித்வா அனர்த்த நிவாரணப் பணிகள் நிறைவு: முழுமையான பிந்திய நிவாரண செயற்பாட்டு அறிக்கை கல்முனை பெரிய பள்ளிவாசலால் வெளியீடு

ஆசிரியர் - Editor III
டித்வா அனர்த்த நிவாரணப் பணிகள் நிறைவு: முழுமையான பிந்திய நிவாரண செயற்பாட்டு அறிக்கை கல்முனை பெரிய பள்ளிவாசலால் வெளியீடு

டித்வா அனர்த்த நிவாரணப் பணிகள் நிறைவு: முழுமையான பிந்திய நிவாரண செயற்பாட்டு அறிக்கை கல்முனை பெரிய பள்ளிவாசலால் வெளியீடு 

ஒரு நிவாரணப் பணியின் நிறைவு என்பது அதன் பயனாளிகளைச் சென்றடைந்த உதவியுடன் மட்டும் முடிவடைவதில்லை; அந்தப் பணியின் முழுமையான பதிவும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக்கூறலும் தான் அதற்கு உண்மையான நிறைவை வழங்குகின்றன என்ற உயரிய நோக்கத்துடன், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணச் செயற்பாடுகள் குறித்த முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஒருங்கிணைப்பில், கல்முனைப் பிராந்தியத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் பங்களிப்புடன் “கல்முனை நிவாரண முகாமைத்துவ பணிமனை” நிறுவப்பட்டு பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 இவ்வேலைத்திட்டத்தில் பங்காற்றிய அனைத்துப் பங்குதாரர் பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் விதமாகவும், மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள், விநியோகிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், நிதி மற்றும் வளங்களின் பயன்பாடு, முழுமையான வரவு-செலவு அறிக்கை, பயனாளிகளைச் சென்றடைந்த உதவிகள் மற்றும் இவ்வேலைத்திட்டத்தின் ஒட்டுமொத்தப் பெறுபேறுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையானது எதிர்கால அனர்த்த நிவாரண வேலைத்திட்டங்களுக்கான அனுபவ ரீதியான வழிகாட்டுதலை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 குறித்த அறிக்கையைப் பங்குதாரர் பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பித்து, அதன் உள்ளடக்கம் தொடர்பாக விளக்கமளிப்பதுடன், எதிர்கால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கான அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று  பெரிய பள்ளிவாசல் காரியாலத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விரைவில் இவ் அறிக்கையானது நூல் வடிவில் அச்சிடப்பட்டு பங்குதாரர் நிறுவனங்களுக்கும், அரச மற்றும் சமூக மட்ட நிறுவனங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதுடன் பொதுமக்களுக்கும் கொண்டுசேர்க்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Radio