SuperTopAds

பெயர் ஒற்றுமையால் குழப்பம் - அலாஸ்கா தேர்தல் முடிவைத் தடுக்க ட்ரம்ப் வழக்குத் தாக்கல்!

ஆசிரியர் - Editor IV
பெயர் ஒற்றுமையால் குழப்பம் - அலாஸ்கா தேர்தல் முடிவைத் தடுக்க ட்ரம்ப் வழக்குத் தாக்கல்!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநில செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டான் சல்லிவன் தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மேரி பெல்டோலா வெற்றிபெற்றால், அந்தத் தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்துவதைத் தடுக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் (AP) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்க நீதித்துறையினால் அலாஸ்காவின் மத்திய நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அலாஸ்கா செனட் தேர்தலில் தற்போதைய குடியரசுக் கட்சி செனட்டர் டான் சல்லிவனுக்கும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மேரி பெல்டோலாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

இதே தேர்தலில் டேனியல் ஜே. சல்லிவன் என்ற பெயருடைய மற்றொரு வேட்பாளரும் போட்டியிடுகிறார். இவர் அலாஸ்காவின் பீட்டர்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்தவர். அவர் சுயமாகப் போட்டியிடத் தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சியினர் அவரது போட்டி தமது வேட்பாளருக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சி எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

டேனியல் ஜே. சல்லிவனைத் தேர்தல் வாக்குச் சீட்டிலிருந்து நீக்குவதற்கான குடியரசுக் கட்சியினரின் முந்தைய முயற்சியை அலாஸ்கா உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனால், அவர் கட்சிச் சார்பற்ற வேட்பாளராகவும், தற்போதைய செனட்டர் டான் சல்லிவன் குடியரசுக் கட்சியின் தற்போதைய செனட்டர் என்ற அடையாளத்துடனும் வாக்குச் சீட்டில் இடம்பெறவுள்ளனர்.

அலாஸ்காவில் நடைமுறையில் உள்ள விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறையின் கீழ், பெயர் ஒற்றுமையால் குழப்பமடையும் வாக்காளர்கள் இரு வேட்பாளர்களையும் தெரிவுசெய்யும் வாய்ப்பும் உள்ளது.

அமெரிக்க செனட் சபையின் கட்டுப்பாட்டைத் தீர்மானிப்பதில் அலாஸ்கா தேர்தல் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என இரு பிரதான அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவது தொடர்பான இந்த வழக்கு, மத்திய அரசாங்கத்துக்கும் மாநில நிர்வாகங்களுக்கும் இடையே நீண்டகால சட்டப் போராட்டத்துக்கு வழிவகுக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Radio