சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் முல்லைத்தீவு மீனவர்கள்!
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர். முல்லைத்தீவில், சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக மீனவர்கள் கடந்த 02 ஆம் திகதி பாரிய ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
மீனவர்களின் தொடர் போராட்டத்தினை அடுத்து, இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் 12 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மீனவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அந்த கலந்துரையாடலினை அடுத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவில் செய்ய முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தினை தொடர்ந்து முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக சட்டவிரோத சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த உத்தியோக பூர்வமற்ற தகவல் கிடைத்தவுடன் நேற்றைய தினமே சிலர் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முல்லைத்தீவு மீனவர்கள் நூறு பேர் அளவில் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில், முல்லைத்தீவு - கள்ளப்பாடு, அந்தோனியார் தேவலயத்தில் ஒன்று கூடியிருந்தனர். மீனவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரனும் கலந்து கொண்டார்.
குறித்த ஒன்று கூடலில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாக மீனவர்கள் பலரும் கவலை தெரிவித்தனர். எதிர்வரும், திங்கள் அன்று முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்திற்கு முன்பாக வாயில் கறுத்த துணியினை கட்டி அமைதியான முறையில் எதிர்ப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.