கிளிநொச்சியில் பெண் கொலைக்கு நீதி கோரி கண்டனப் பேரணி!

கிளிநொச்சி பன்னங்கண்டி வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட முல்லைத்தீவு முறிகண்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா என்ற பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி முறிகண்டிப் பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முறிகண்டி மற்றும் இந்துபுரம் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையாக இன்று காலை பத்து மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
அன்று வித்தியா இன்று நித்தியகலாவா, ஒன்று சேர்வோம் பெண்களை பாதுகாப்பதற்காக, இருப்பவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா, போராடுவோம் போராடுவோம் நீதிக்காக போராடுவோம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டம் இடம்பெற்றது.
ஏ -9 வீதி வழியாக திருமுறிகண்டி பொதுநோக்கு மண்டபம் வரை சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதோடு கண்டன உரைகளும் இடம்பெற்றன.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான து. ரவிகரன், ஆ. புவனேஸ்வரன், த. குருகுலராஜா மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரினை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடமும் எதிர்க்கட்சி தலைவருக்கான மகஜரினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் வடமாகாண முதலமைச்சருக்கான மகஜரினை வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரனிடமும் பொலிஸ்மா அதிபருக்கான மகஜரினை மாங்குளம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமாரவிடமும் கையளித்தனர்.