யாழ்.போதனா வைத்தியசாலக கழிவுகள் கடலில் கலப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் குடாக்கடலில் கலக்க விடுதல் தொடர்பாக கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயாளனால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி.சத்தியமூர்த்தி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
வைத்தியசாலையிலிருந்து, யாழ். பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பரிசோதிப்பதற்காக நேரடியாக விஜயம் செய்யப்பட்டது. வைத்தியசாலைப் பணிப்பாளர் மாநகர சபை உறுப்பினர்களான ம.அருள்குமரன்ங, ந.லோகதயாளன் ஆகியோர் இன்று காலை குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு நேரில் சென்றிருந்தனர்.
குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற போது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியதோடு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.