பொது இடங்களில் குப்பை கொட்டிய 5 குடியிருப்பாளர்களுக்கு தண்டம்..
யாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர வீதி ஓரங்களில் குப்பை கொட்டியதாக 5 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் தனித்தனியே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னதுரை சதீஸ்தரன் முன்னிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.
குடியிருப்பாளர்கள் ஐவரையும் எச்சரித்த நீதிவான், தலா 5 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து அவர்களை விடுத்தார்.
இதேவேளை, டெங்கு நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால், குடியிருப்பாளர்கள் மூவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்கள் மூவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களையும் எச்சரித்த நீதிமன்று, தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து விடுவித்தது.