SuperTopAds

முல்லைத்தீவில் 991 ஏக்கர் நிலம் மட்டுமே இராணுவத்திடம் உள்ளதாம்..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் 991 ஏக்கர் நிலம் மட்டுமே இராணுவத்திடம் உள்ளதாம்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 271  குடும்பங்களிற்குச் சொந்தமான 991 ஏக்கர் நிலமே படையினர் வசம் உள்ளதாக பிரதேச செயலாளர்களினால் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் விபரங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் தற்போதும் படையினர் வசம் உள்ள அளவு எவ்வளவு . இதுவரை காலமும் படையினர் விடுவித்த நிலம் எவ்வளவு என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று  நேற்றைய தினம் மாவட்டச் செயலகத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். இதன்போதே குறித்த அளவு விபரம் வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவினில் 99 குடும்பங்களிற்குச் சொந்தமான 498. 5 ஏக்கர் நிலம் தற்போதும் படையினர் வசம் உள்ளது. 

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவினில் 70 குடும்பங்களிற்குச் சொந்தமான 186 ஏக்கர் நிலம் தற்போதும் படையினர் வசம் உள்ளதாக பிரதேச செயலாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது. மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவினில் 4 குடும்பங்களிற்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலம்  படையினர் வசம் உள்ளது.

இந்த அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவினில் 93  குடும்பங்களிற்குச் சொந்தமான 169 ஏக்கர் நிலமும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 5 குடும்பங்களின் 8 ஏக்கர் நிலமும் என மொத்தமாக தற்போதைய காலத்திலும் 271  குடும்பங்களிற்குச் சொந்தமான 991 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது . 

என பிரதேச செயலாளர்களினால் வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை 2010மீளக் குடியமர்வின் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு விபரமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு விடுவிக்கப்பட்ட அளவினில் மக்கள் வாழ் விடயங்கள் அன்றி அரச திணைக்களங்கள் , பொது இடங்களின் அளவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும் தற்போதும் படையினர் வசம் உள்ள நிலங்களில் மட்டும் மக்களின் வாழ்விடங்களாக மக்களிடம் ஆவணங்கள் உள்ள நிலங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.