விடுதலைப்புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட இரணைமடுவிலுள்ள விமான ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு விமானத் தளமாக மாறவுள்ளது.
கிளிநொச்சியில் யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீட வளாகத்தில் உள்ள கட்டடத் தொகுதிகளை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரணைமடு விமான ஓடுபாதை உள்நாட்டு விமானத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார்
விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளம் கிளிநொச்சி இரணைமடுவில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. புலிகள் வசமிருந்த இரணைமடுவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்-14 ஆம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் கடந்த- 2011 ஓகஸ்ட்-03 ஆம் திகதி இரணைமடு விமானப்படை முகாமாக மாறியது.
அங்கு விமான ஓடுபாதை அமைக்கும் பணி கடந்த 2012 ஆம் ஆண்டில் இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஓடுபாதைக்கு காபட் இடும் பணி கடந்த-2013 ஏப்ரலில் ஆரம்பமானது.
இந்நிலையில் இந்த விமான ஓடு பாதை கடந்த-2013 ஆம் ஆண்டு யூன்மாதம்-15 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுபாதை 1500 மீற்றர் நீளமும்,25 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.
மாங்குளம், அம்பகாமம்,ஒலுமடு மற்றும் கிளிநொச்சி,வட்டக்கச்சி,இராமநாதபுரம் வழியாக இந்த விமான ஓடுபாதையை அடைய முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.