விஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும்

ஆசிரியர் - Admin
விஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும்

சபரி

”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்களப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட, சிங்கள தேசியவாதக் கட்சிகள் விஜயகலாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கின்றன. ஐ.தே.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு ராஜபக்ஷ தரப்பு முற்பட, பிரச்சினையைச் சமாளிப்பதற்கு இரட்டை அணுகுமுறை ஒன்றை ரணில் வகுத்துக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 2015 தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை சீன நிறுவனம் ஒன்று வழங்கியிருந்ததாக ‘நியூயோர்க் ரைமஸ்’ வெளியிட்டிருந்த செய்தியால் தலைநகர அரசியலில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பை விஜயகலாவின் உரை பின்னால் தள்ளிவிட்டது.

யாழ்ப்பாணத்தில் இரு முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே தன்னுடைய இந்த சர்ச்சைக்குரிய உரையை விஜயகலா நிகழ்த்தினார். அமைச்சர்களான வஜிர அபயவர்த்தன, திலக் மாரப்பன ஆகியோருடன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். இதனைவிட முக்கிய அரசாங்க, பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.

சர்ச்சைக்குரிய உரை

2009 இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எமக்காக எதையும் செய்யவில்லை என விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியதாகவே பத்திரிகைச் செய்திகள் வெளிவந்திருந்தன.

வியகலாவின் உரை சர்ச்சைக்குரிய ஒன்றுதான் என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது. ஆனால், அது தென்னிலங்கையில் உருவாக்கிய கொந்தளிப்புக்கு அரசியல் ரீதியான காரணங்களும் உள்ளன. ‘தமிழ்’ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வாறான உரைகளை நிகழ்த்துவது வழமைதான். தேர்தல் காலங்களில், அல்லது தமது செல்வாக்கு கீழிறங்கும் போது இவ்வாறான உரைகளை நிகழ்த்தி அவர்கள் தமது ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்வது வழமை. ஆனால், கொழும்பை மையப்படுத்திய தேசியக் கட்சி ஒன்றின் பிரதிநிதி அரசாங்கத்தில் முக்கிய பங்காளியாகவுள்ள கட்சியின் அமைச்சராக இருந்துகொண்டு அவர், இவ்வாறான உரை ஒன்றை நிகழ்த்தும் போது, தென்னிலங்கையில் அது அரசியல் மயப்படுத்தப்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

தென்னிலங்கையில் இப்போது நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தியும், பிணைமுறி விவகாரமும்தான் கட்சி அரசியல் விவகாரங்களை ஆட்டிப்படைக்கின்றன. நியூயோர்க் ரைம்ஸ் செய்தி ராஜபக்ஷ தரப்புக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. அதிலிருந்து மக்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்கு விஜயகலா விவகாரம் அவர்களுக்குக் கைகொடுத்திருக்கின்றது. அதனைவிட, விஜயகலா சார்ந்துள்ள ஐ.தே.க.வுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் இது ராஜபக்ஷ தரப்பு இதனைப் பயன்படுத்திக்கொள்வர்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதுதான்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு என்பதற்கு மேலாக, அதற்கு ஆதரவான கருத்துக்கள் எதனையும் தேசத்துரோகமாகப் பார்க்கும் நிலைதான் தென்னிலங்கையில் உள்ளது. வடக்கில் வாக்கு வங்கியை அறுவடை செய்வதற்கு இதனைப் பயன்படுத்தினாலும், தேசிய அரசியலில் இது சர்ச்சைக்குரிய ஒன்றுதான். அதனால், விஜயகலாவின் உரை, அவர் சார்ந்த கட்சித் தலைமைக்கு தென்பகுதியில் பெரும் நெருக்கடியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான். அதிலும், சிங்களப் பத்திரிகைகள் இதற்குக் கொடுத்த முக்கியத்துவம் ஐ.தே.க. தலைமைக்கு அழுத்தங்களை அதிகரிப்பதாகவே அமைந்திருக்கும்.

ரணிலின் இராஜதந்திரம்

கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரத்தை கையாள இரட்டை அணுகுமுறை ஒன்றைப் பயன்படுத்தியிருக்கின்றார். பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டபோது, விஜயகலாவை நேரடியாகப் பாதுகாக்கவோ, அல்லது அவர் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவோ முற்படாமல், ராஜபக்ஷ தரப்பின் மீதான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். ”600 பொலிஸாரின் கொலைக்குக் காரணமாகவிருந்த கருணாவுக்கு பிரதி அமைச்சர் பதவியும், கட்சியின் உப தலைவர் பதவியும் கொடுத்தது நீங்கள்தானே” எனக் கூறுயதன் மூலமாக, எதிரணியை வாயடைக்கச் செய்வதில் அவர் வெற்றிபெற்றார். ஒரு விஷயத்தைச் சமாளிக்க மற்றொரு விடயத்தை பூதாகரமாகக் காட்டும் ரணிலின் இராஜதந்திரம் இது!

விஜயகலா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ரணில் நியமித்திருக்கின்றார். அமைச்சர்களான தலதா அத்துக்கொரளை, அகில விராஜ்காரியவசம், கபிர் காஷிம் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது விசாரணையை முடித்து கட்சியின் மத்திய குழுவுக்கு தமது அறிக்கையை பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனைவிட, சபாநாயகர் கரு ஜயசூரியவும், சட்டமா அதிபரிடம் இவ்விவகாரத்தை எவ்வாறு கையாள முடியும் என ஆலோசனை கேட்டிருக்கின்றார்.

இதேவேளை, விஜயகலாவும் தமது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். கட்சித் தலைவருடைய ஆலோசனையுடன்தான் இதனை அவர் செய்திருப்பார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆக, ஐ.தே.க. தலைமை ஒருபுறம் விஜயகலாவைப் பாதுகாக்க முற்படுகின்றது. மறுபுறத்தில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு சிங்களக் கடும் போக்காளர்களின் வாய்களை அடைக்க முற்படுகின்றது.

தமிழ் வாக்குகள்

ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் விஜயகலா ஒருவர்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர். முக்கிய தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில், ஐ.தே.க. நம்பியிருப்பது சிறுபான்மையினரின் வாக்குகளைத்தான். சிங்களக் கடும்போக்காளர்களின் வாக்குகளை ராஜபக்ஷ தரப்பினர் வளைத்துப்போட்டுவிடுவார்கள் என்பதால், தமிழ் வாக்குகளைக் காப்பாற்ற வேண்டிய அரசியல் தேவை ரணிலுக்குள்ளது. அவரது அரசியல் எதிர்காலத்துக்கு அதுதான் அவசியம். அதனால், விஜயகலா விடயத்தை நிதானமாகக் கையாள வேண்டியவராக ரணில் உள்ளார். அதனால்தான், இரண்டு தரப்பையும் சமாளிக்கும் வகையிலான அணுகுமுறை ஒன்றை அவர் கையாள்வதாக கருதப்படுகின்றது.

ஐ.தே.க. எம்.பி. எஸ்.எம்.மரிக்கார்தான் இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் முதலில் கிளப்பியவர். விஜயகலாவின் உரையால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சமாளிக்க வேண்டிய தேவை கட்சித் தலைமைக்குள்ளது. மறுபுறம் ராஜபக்ஷண தரப்பினர் இதனைத் தமது நலன்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இந்த இரண்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் கட்சிக்கு இருக்கக்கூடிய ஆதரவுத் தளத்தைப் பாதிக்காத வகையிலும் செயற்பட வேண்டிய தேவை கட்சித் தலைமைக்கு இருக்கின்றது. விஜயகலாவின் உரை வடக்கு தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருப்பதால், வரப்போகும் தேர்தல்களில் அது தமக்கு உதவும் என்பதும் ரணிலுக்குத் தெரியும். அதனால், விஜயகலா மீது விசாரணை என தென் இலங்கையைச் சமாளித்தாலும், அவரைப் பாதுகாக்கவேண்டிய தேவையும் ரணிலுக்குள்ளது.

பிரதிபலிப்புகள்

விஜயகலாவின் உரை அரசியல் முதிர்ச்சியற்ற ஒன்று என சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பல விமர்சித்துள்ளன. இருந்தபோதிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை மற்றொரு கோணத்தில் பார்த்துள்ளார்.

”போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன. இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன.

நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையும் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன்.

பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை” என வடக்கு முதலமைச்சர் விஜயகலாவுக்காக குரல்கொடுத்திருக்கின்றார்.

வடக்கில் கடந்த இரண்டு மூன்று வாரங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆறு வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டமை, குடும்பப்பெண் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்ற கொள்ளை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் வடக்கில் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பின்னணியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தனது உரையை விஜயகலா நிகழ்த்தியிருந்தார். அவர் என்ன சொன்னார் என்பதைவிட, எதற்காக அவ்வாறு சொன்னார் என்பதை ஆராய்வதே முக்கியம்!

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு