தமிழரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் முறுகல்!
மன்னார் நகரசபை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைக்கு மன்னார் ஆயர் இல்லம் ஊடாகத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மன்னார் நகரசபை ரெலோவுக்கு ஒதுக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதனையடுத்து மன்னார் நகரசபையின் ஆட்சிக் காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழரசுக் கட்சியும், அடுத்த இரு ஆண்டுகள் ரெலோவும் என்ற அடிப்படையில் இணக்கம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறானதொரு இணக்கம் எட்டப்படவில்லை என்று ரெலோ திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றது.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும், ரெலோவினருக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது. இதிலும் இணக்கம் காணப்படவில்லை.
இதன் பின்னர், மன்னார் நகர சபைக்கு ரெலோ அமைப்பினால் தயாரிக்கப்பட்ட வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்ட ஒருவரை நீக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு ரெலோ இணங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் மன்னாரில் தமிழரசுக் கட்சித் தேர்தல் பணிகளில் இருந்து முற்றாக ஒதுங்கியிருக்கும், எந்தவொரு வேலையிலும் கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என்கிற நிலைப்பாடே தோன்றியிருக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே மதத் தலைவர்கள் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி எடுத்துள்ளனர் என்று அறிய முடிகின்றது.