SuperTopAds

மன்னார்- ஓலைத்தொடுவாய் கிராமத்தில் 500 பனைகள் எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
மன்னார்- ஓலைத்தொடுவாய் கிராமத்தில் 500 பனைகள் எரிந்து நாசம்..

மன்னார் மாவட்டத்தில் ஓர் தீ அணைப்பு  சேவை இன்மை காரணமாக ஓலைத் தொடுவாய் பகுதியில் ஆயிரத்து 500 பனைகள் தீயினில் எரிந்து நாசமாகியது. 

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடக்கின் அரும்பெரும் சொத்துக்களில் ஒன்றான கற்பகதரு பனை விருட்சம் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தில் பனை மரம் அதிகமுடைய பிரதேசமான ஓலைத் தொடுவாய் பகுதியில் கடந்த வியாழக் கிழமை பகல்வேளையில் சுமார் 11 மணியளவில் தீ பற்றிக்கொண்டது. 

இருப்பினும் பல பொது மக்கள் , மாவட்டத்தில் இருந்த படையினர் எனப் பலரும் பல மணிநேரம் தண்ணீர் பவுசர்களின் துணையுடன் போராடியும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

இதன் தீ ஆனது இரவு 12 மணி வரையில் பொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரத்து 500 பனைகள் தீயினில் எரிந்து நாசமாகியுள்ளன. 

இந்த பனைகளை நம்பி வாழ்ந்த 60ற்கும் மேற்பட்ட சீவல் தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  மாவட்டத்தின் பெரும் சொத்து நாசமாகியுள்ளது. 

இவ்வாறு ஏற்பட்ட அணர்த்தத்தின்போது பனைகள் மூலம் பரவிய தீ இறுதியில் இரு வீடுகள் மீதும் பரவியது. இதன் இறுதியில் பெரும் போராட்டத்தின் மத்தியிலேயே தீ அணைக்கப்பட்டது. 

இந்த நிலமையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு கட்டுப்படுத்த மாவட்டத்திற்கு ஓர் தீ அணைப்பு  சேவையை வழங்குமாறு நாம் நீண்டகாலம் விடுத்த கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

அவ்வாறு ஓர் தீ அணைப்பு  சேவையை இந்த மாவட்டத்திற்கு வழங்கத் தவறியவர்களே இந்த அழிவிற்கு பொறுப்பேற்க வேண்டும். அதே நேரம் இந்த தீயின் காரணமாக அழிவடைந்த வீடுகள் , 

பனை மரங்களின் உரிமைநாளர்களிற்கு இழப்பீடும் தொழிலை இழந்து தவிக்கும் தொழிலாளர்களிற்கு நிவாரணமும் வழங்க ஆவண செய்யப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக இனியும் காலம் கடத்தாது மன்னார் மாவட்டத்திற்கு ஓர் தீ அணைப்பு  சேவை இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.