யாழ்ப்பாண மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினரான ஜெகன் மீதான தடை நீடிப்பு!
யாழ்ப்பாண மாநகர சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினரான வே.குகேந்திரன் (ஜெகன்), மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு விதிக்கப்பட் டுள்ள இடைக்காலத் தடை நேற்று மீண்டும் நீடிக்கப்பட்டது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5ஆம் திகதி இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் நடைபெறவுள்ளது.
குகேந்திரன் இரட்டைக்குடியுரிமையுள்ளவர் என்பதால், அவர் உள்ளூராட்சிமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, அவரது மாநகர சபை உறுப்புரிமையை செல்லுபடியற்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரி கடந்த ஜூலை மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் குகேந்திரனுக்கு இடைக்காலத் தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பத்மன் சூரசேன, நீதியரசர் அர்ஜூன ஒபயசேகர முன்னிலையில் இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளர் சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நிரான் அங்கிட்டல், செல்வி ஜே.அருளானந்தம் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். குகேந்திரன் சார்பில் சட்டத்தரணி அப்துல் நஜீப் முன்னிலையாகியிருந்தார்.
ஈ.பி.டி.பியின் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் மன்றுக்கு வந்திருந்தார்.இலங்கையும் கனடாவும் பொதுநலவாய நாடுகள். குகேந்திரன் இந்த இரு நாடுகளினது குடியுரிமைகளையே வைத்துள்ளார்.
1953ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டஏற்பாட்டில் பொதுநலவாயத்தைச் சேர்ந்த எந்தவொரு நாட்டுக் குடியுரிமையை வைத்திருந்தாலும் அது வேறொரு நாட்டுக்கு விசுவாசமானவராக கருத முடியாது. வேறு நாட்டுக்கு விசுவாசமாக இருந்தார் என்ற அடிப்படையில் குகேந்திரனின் உறுப்புரிமையை நீக்க முடியாது என்று, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதத்தை முன்வைத்தார்.
1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகும்போது, பொதுநலவாயத்தைச் சேர்ந்த நாடுகளும், வேறு நாடுகள் என்ற வரையறைக்குள் வந்துள்ளது. எனவே 1953ஆம் ஆண்டு சட்டம், தற்போது ஏற்புடையதாகாது என்று முறைப்பாட்டாளர் சார்பு சட்டத்தரணிகளால் குறிப்பிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள், ஏற்கனவே வழங்கிய இடைக்காலக் கட்டளையை நீடித்து உத்தரவிட்டார்கள். வழக்கை ஒக்ரோபர் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்கள். அன்றைய தினம் இந்த வழக்கு மீதான வாதம் நடைபெறும்.