யாழ்.நகரில் கொள்ளையர்களின் அட்டகாசத்தினால் மலை 6மணிக்கே மூடப்படும் வர்த்தக நிலையங்கள்.
யாழ்ப்பாண நகரில் அண்மை நாட்களில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கொள்ளையர்களால் இரவு 6 மணியுடன் வர்த்தக நிலையங்களை இழுத்துப்பூட்டவேண்டிய நிலமை காணப்படுவதாக யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண நகரில் கடந்த சில நாட்களாக இரவில் மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் முகங்களை மூடியவாறு வாள்களுடன் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள் , கத்தி முனையில் கொள்ளையடிக்கின்றனர்.
இருப்பினும் எந்தவிதமான நடவடிக்கையும் கிடையாது. இரவு 10.00 மணிக்குப் பின்பு பூட்டிய வர்த்தக நிலையங்கள்கூட தற்போது 6 , 7 மணியுடன் இழுத்து மூடும் நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் யாழ். நகரின் ஸ்ரான்லி வீதியில் இரவு 11 மணிவரை வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள் இரவு 7 மணிக்கு முன்பாக வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வீடுகளிற்குள் முடங்கும் நிலமை உள்ளது.
அதாவது இந்த நிலமை யுத்தகாலத்தின் ஊரங்கு சட்டத்தை ஒத்த நிலமையை தோற்றுவிக்கின்றது. இதனால் வர்த்தகர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலே கானப்படுகின்றது.
சிறு சிறு சம்பவங்கள் அல்லது ஓர் இரு சம்பவங்களின் சூத்திரதாரிகளை பிடிக்கும் பொலிசார் இவ்வாறான பாரிய சம்பவங்கள் தொடர்பில் மௌனிகளாக உள்ளனர்.
அண்மையில் குடாநாட்டிற்கு வந்த பொலிஸ்மா அதிபர் கூறினார் மேலதிக பொலிசார் வரவலைக்கப்பட்டு அனைவரின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டு அனைத்தும் கண்காணிப்பதாக.
அவ்வாறானால் இவ்வாறு துணிந்து வாள்களுடன் வந்து இரவு 8 மணிக்கு பல வர்த்தகரை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் எவ்வாறு சர்வ சாதாரணமாக தப்பிச் சென்றனர். எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு வர்த்தகர்கள் எழுப்பும் கேள்வி தொடர்பில் வர்த்தக சங்க உப தலைவரும் வட மாகாண சபை உறுப்பினருமான ஜெயசேகரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த விடயம் தொடர்பில் இன்று ( நேற்று ) யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
இது தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாகவும் அதற்காக மேற்கொள்ளும் பொறிமுறை தொடர்பில் எமக்கும் அறியத்தருவதாகவும் கூறியுள்ளார். எனப் பதிலளித்தார்.