யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்பு! - விந்தன் கனகரத்தினம்

ஆசிரியர் - Admin
யாழ். வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்பு! - விந்தன் கனகரத்தினம்

உலக வரலாற்றிலேயே பிரசித்தமான போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்று போராட்ட இயக்கங்கள் இதுவரை இருந்ததுமில்லை, எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. அந்த இயக்கத்தையே தாங்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம் என மார்தட்டிக் கொண்டு திரியும் முப்படைகளாலும் இந்த வாள்வெட்டுக் குழுக்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை(25) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒன்பது மாகாணங்களில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. இந்த 25 மாவட்டங்களிலும்மைத்திரி ஆட்சிக்கு வந்த பின்னர் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் தான் வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்பூதம் என்ற பிரச்சினை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியதாக இருந்து வந்தது.

இதனையடுத்து நாவாந்துறைப் பகுதியில் கிறிஸ்பூதம் மீது மக்கள் ஆக்ரோஷமான தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அண்மையில் சட்ட ஒழுங்கு அமைச்சரும், பொலிஸ்மா அதிபரும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்கள். இங்குள்ள முதலமைச்சர் மற்றும் பொலிஸாரை அழைத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மானிப்பாய் முதல் அரியாலை வரை இரவிரவாக பல்வேறு தாக்குதல் சம்பவங்கள், வர்த்தக நிலையங்களில் கொள்ளைகள் என்பன இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் தொடர்ந்தும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் ஏன் அரங்கேறுகின்றன? என்ற சந்தேகம் எமக்கும், மக்களுக்கும் தொடர்ந்தும் இருந்து வருகிறது. இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு சதித் திட்டமா?

ஒருகாலத்தில் நாட்டை, மண்ணை, மக்களை, இருப்பை, மொழியை, கலாசாரத்தை, பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக மன்னர்கள் வாளேந்தினார்கள். ஆனால், இன்று எம்மவர்கள் எம்மவரேயே வெட்டி விழுத்துவதற்காக வாளேந்திப் போராடுகின்றார்கள்?

இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக, முப்படைத் தளபதியாக ஜனாதிபதி காணப்படுகின்றார். அது மாத்திரமன்றி சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கென ஒரு அமைச்சுக் காணப்படுகின்றது. இங்கே தேவைக்கு அதிகமான பொலிஸாரும் ,பொலிஸ் நிலையங்களும் காணப்படுகின்றன. நீதித் துறை, சட்டத்துறை என்பன இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கான பின்னணி தானென்ன?

இலங்கையிலுள்ள மாகாணங்களிலேயே அதிகளவு மது விற்கக் கூடிய மாகாணமாக யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இளைஞர்களை மது, போதைக்கு அடிமையாக்கி அவர்களை மதியிழக்கச் செய்து வேறு திசை நோக்கிப் பயணிக்கும் திட்டமிட்ட சதிச் செயலாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்களுக்கும், போதைவஸ்துக் கடத்தலுக்கும் பின்னணியில் பொலிஸாருடைய தூண்டுதல், அவர்களுடைய பங்களிப்பு என்பன காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய போது பொலிஸ்மா அதிபரே அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றார் எனில் இதற்கெல்லாம்ல் யார் பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதன் பின்னணியில் அரச சக்திகளும், புலனாய்வாளர்களும் காணப்படுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்குமுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு