சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதுடன், நோயாளிகளுக்கான வசதிகள் சரியாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
நோயாளர்களுக்கான அனுமதி வழங்குமிடத்தில் போதிய ஊழியர்கள் கடமையில் இல்லாமல் காணப்படுவதால் , அனுமதிக்காக பல மணிநேரம் நோயாளர் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.
பெண் நோயாளிகளுக்கான விடுதியில் ஆண் துப்பரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் விடுதியில் உள்ள பெண் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படாமல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் பணியாளர்கள் யார் பொதுமக்கள் யார் என குழப்பம் நோயாளிகள் மத்தியில் காணப்படுகிறது.
அத்துடன், புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிகளுக்கான மலசல கூடங்கள் துப்பரவு இல்லாமல் , சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. அதனால் நோயாளிகள் மலசல கூடத்தை பாவிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் பலமுறை வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரிவித்த போதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் துப்பரவற்ற மலசலகூடத்துக்கு முன்பாகவே நோயாளிகளின் உணவருந்தும் அறை காணப்படுகின்றது. இதனால் நோயாளிகளால் உணவை கூட ஒழுங்காக உண்ணமுடியாத அருவருக்கத்தக்க நிலமை காணப்படுவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இவை தவிர வைத்தியசாலை சுற்றாடலில் கட்டாக்காலி நாய்களும், குப்பைகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமலும் மருத்து துடைத்த பஞ்சுத் துண்டுகள் கூட சரியாக அகற்றப்படாமல் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.