கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் இராணுவத்தால் புறக்கணிப்பு!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத உயர்வைக் காண்பிக்கின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கான உயர் நிதி ஒதுக்கீடு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், அதில் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 437 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீத உயர்வைக் காண்பிக்கின்றது. அரச கட்டமைப்புக்களில் குறிப்பாக நிதிசார் விடயங்கள் உரியவாறான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படாததும், அநாவசிய விரயங்கள் உயர்வான மட்டத்தில் காணப்படுவதும், ஊழல் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதுமான கட்டமைப்பே இராணுவமாகும்.
2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினால் அவர்கள் வசமிருந்த சுமார் 4439 ஏக்கர் காணி தொடர்பான விபரங்கள் அவர்களது நிதியறிக்கையில் வெளியிடப்படவில்லை. அவற்றில் வட, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளும் உள்ளடங்கியிருக்கக்கூடும். அதேபோன்று அரச வளங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் ஊடாக ஈட்டப்பட்ட 170.16 மில்லியன் ரூபா வருமானம் பற்றிய விபரங்களும் நிதியறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அதேபோன்று நிதியறிக்கையில் செலவினங்களைக் குறைத்துக் காண்பிப்பது பொதுவானதெனினும், மேற்குறிப்பிட்ட இராணுவத்தின் நிதியறிக்கையில் சொத்துக்களின் பெறுமதி உயர்வாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி 11 சந்தர்ப்பங்களில் செய்யப்பட்டிருக்கும் 8.15 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் கொள்வனவு தொடர்பில் விநியோகஸ்த்தர்களுடன் ஒப்பந்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு 8.82 மில்லியன் ரூபா பெறுமதியான 123 வைப்புக்கள் அரசாங்க வருமானத்துடன் சேர்க்கப்படவில்லை.
இவை இராணுவ செலவினங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன. ஆனால் இவ்வெளிப்படுத்தல்களுக்கு மத்தியிலும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் இராணுவத்தால் புறந்தள்ளப்பட்டுள்ளமை, இராணுவ செயற்பாடுகளில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கைக் காண்பிக்கிறது என விசனம் வெளியிட்டுள்ளார்.