அறைக்குள் இருக்கும் யானையை எதற்கு வெளியே தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்?

வடக்கில் இன்று அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கும், போதைக் கடத்தல்களுக்கும் பின்புலம் இராணுவமே. கிறிஸ் பூதம் மற்றும் ஆவா உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் பின்புலம் எவ்வாறு இராணுவமாக இருந்ததோ அவ்வாறுதான் இன்று போதைப்பொருளின் பின்புலத்திலும் இராணுவமே உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால், பிரச்சினைக்குரிய காரணத்தைச் சரியாக இனங்கண்டு அதைக் களைய வேண்டும். பிரச்சினையின் பின்புலமே இராணுவத்தினரும், கடற்படையுமாக இருக்கின்றபோது, அதே கடற்படையையும் அதே இராணுவத்தையும் வைத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையைச் சரிசெய்துவிடலாம் என்று நீங்கள் கனவு காணாதீர்கள். அறைக்குள் இருக்கும் யானையை எதற்குத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்?
தமிழர்கள் இன்று இராணுவத்தையும், கடற்படையையும் தமது எதிரிகளாகப் பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அவர்களின் மனோநிலையை மாற்றாமல், அதற்குரிய திட்டங்களை ஆத்மார்த்தமாக முன்னெடுக்காமல் ஒருநாளும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
இந்த விடயத்தை நாங்கள் கோபத்திலேயே, இனவாதத்திலையோ, வெறுப்பிலையோ சொல்லவில்லை. இதுவே உண்மை. எனவே, தற்போதைய அரசாங்கம் உண்மையில் ஒரு முறைமை மாற்றத்துக்குள் செல்கின்றது என்றால், இந்த அடிப்படையைச் சீரமைக்க வேண்டும் - என்றார்.