SuperTopAds

செம்மணிப் புதைகுழி ஆதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்து!

ஆசிரியர் - Admin
செம்மணிப் புதைகுழி ஆதாரங்கள் அழிக்கப்படும் ஆபத்து!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.     

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றுகையில், "கொக்குத்தொடுவாய் பகுதியிலும், மன்னார் பிரதேசத்திலும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ். செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதனை நான் நேரில் சென்று பார்த்தேன்.

நான் அங்கு சென்று பார்த்தபோது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை. நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படவும் இல்லை. எங்கள் கட்சி உறுப்பினர்களில் ஒருவர் மயானத்தை நிர்வகிக்கும் குழுவிலும் உள்ளார்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவரிடம் கூறினேன். அதன்பிறகு நீதிபதிகள் தலையிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

ஆனால், இங்கே புதைகுழிகள் தொடர்பில் எந்த நெறிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. என் அறிவுக்கு எட்டியவரைத் தெளிவான நெறிமுறை பின்பற்றப்படுவதில்லை.

இதற்கு நிதிப் பற்றாக்குறை காரணம் காட்டப்படுகிறது. இந்த விடயங்களை உடனடியாகக் கவனிக்க வேண்டும். மன்னார், கொக்குத்தொடுவாய் ஆகிய இரண்டு இடங்களிலும் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

இதனால் யாழ். செம்மணியிலும் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றோம். குறித்த பகுதிக்குப் பாதுகாப்பு வழங்காமல் இருப்பதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.