வட, கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்கும் அனுர அரசு!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை குவித்து வைத்திருக்க வேண்டும் என்ற முன்னைய அரசாங்கத்தின் கொள்கையையே இந்த அரசாங்கமும் பின்பற்றுகிறது. இந்த வரவு - செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு மட்டும் போதும். வடக்கு, கிழக்கில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை நாங்கள் ஆலோசனை குழு மற்றும் பாராளுமன்றத்தில் பேசினாலும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றங்கள் செய்யாது இனவாதம் அழிக்கப்படும் என்று கூற முடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வரவு, செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்காக 434 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த வரவு,செலவுத் திட்டங்களை விடவும் மூன்று மடங்கு அதிகரிப்பாகும் . பாதுகாப்புக்கு வழங்கியுள்ள முன்னுரிமையை பார்க்கும் போது பாதுகாப்பு படையினரை பலப்படுத்துவது போன்றே உள்ளது. நாட்டில் 16 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பை பலப்படுத்துவதாக இந்த அரசாங்கத்தின் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படுகிறது.
சமூக நலன்புரிகளை விடவும் அதிகளவில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலன்புரி வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இருக்கின்றது.இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 42 பில்லியன் ரூபாவில் இருந்து 35 பில்லியன் ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் பொருளாதா விலையேற்றத்தால் மக்கள் பாதிக்ககப்பட்டுள்ள நிலையில் உதவித் தேவைப்படும் துறைகளை விட்டுவிட்டு வேறு விடயங்களுக்கு அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. முன்னைய அரசாங்கம் சமூக நலன்புரிகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறியவர்கள் இப்போது அதனையே செய்கின்றனர்.
சிலர் இங்கே உரையாற்றும் போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் நோக்கத்தை குறிப்பிட்டிருந்தனர். பொதுவாக ஒவ்வொரு நூறு குடிமகனுக்கும் 1.55 விகித பாதுகாப்பு படை வீரர் இருக்க வேண்டும் என்றே புள்ளி விபரமொன்று குறிப்பிடுகின்றது. ஆனால் உதாரணத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் இரண்டு குடிமகனுக்கு ஒரு படை உத்தியோகத்தர் என்ற ரீதியில் படையினர் இருக்கின்றனர்.
22 பிரிவுகள் பாதுகாப்பு பிரிவுகள் உள்ள நிலையில் அவற்றில் 16 பிரிவுகள் வடக்கு, கிழக்கிலேயே அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சகல பாதுகாப்பு பிரிவுகளையும் அங்கேயே குவித்துள்ளீர்கள். இது தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன என்று கேட்கின்றேன். இதன்மூலம் நீங்கள் வழங்கும் செய்தியென்ன? இது மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடு அல்லவா? நாங்கள் தான் உங்களுக்கு எதிரி என்ற செய்தியையா கூற வருகின்றீர்கள்.
முன்னைய அரசாங்கத்தை போன்றே இந்த அரசாங்கத்தின் கொள்கையும் உள்ளது. இந்த வரவு, செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடு மட்டும் போதும். இந்த அரசாங்கம் இதனை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான பிரச்சினைகளை நாங்கள் ஆலோசனை குழு மற்றும் பாராளுமன்றத்தில் பேசினாலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறுவதில்லை. மாற்றங்கள் செய்யாது இனவாதம் அழிக்கப்படும் என்று கூற முடியாது. இதனால் இது தொடர்பில் வாக்கெடுப்பை கோரவுள்ளதுடன் இதற்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.