இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தை ஆக்கிரமித்துள்ள படையினர்!

கிளிநொச்சி நகரத் திட்டமிடலுக்காக விவசாயத் தேவை தொடர்பில் கவனம் செலுத்தும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்திப் பண்ணைக்கான 416 ஏக்கர் காணியில் இன்று 50 ஏக்கர் நிலமே உரிய திணைக்களத்திடமுள்ளது என இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 2030ஆம் ஆண்டின் நகரத் திட்டமிடல் தொடர்பான முதலாவது பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை நகரத் திட்டமிடல் அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தலைமையில் கிளிநொச்சி நண்பர்கள் விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.செயலர் மேலும் தெரிவித்ததாவது:
கிளிநொச்சி நகரத் திட்டமிடலுக்காக 33 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கிராம அலுவலர் பிரிவுக்குள் அலுவலகம், நிர்வாகம், விவசாயம், கைத்தொழில், கல்வி, போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றமை வரவேற்கப்படவேண்டிய ஒரு விடயம்.
ஆனாலும் இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளுக்குள் மட்டும் விவசாயிகளின் முக்கிய மூன்று மையங்கள் இன்றுவரை படையினரின் பிடியில் உள்ளன. அவற்றில் படையினர் சாதாரணமாக விவசாயம் செய்கின்றனர். இதனால் வருடாவருடம் விவசாயிகள் தமக்கான விதைநெல்லைப் பெறமுடியாது தென்னிலங்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
இந்தப் பண்ணையின் முழு நிலத்தினையும் உரிய திணைக்களத்திடம் கையளித்தால் அங்கே 400 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அத்தோடு இந்த நிலத்தில் பெறப்படும் விதை நெல்லானது எமது மாவட்டத்துக்கு மட்டு மன்றி எமது மாகாணத்துக்கே போதுமானதாக அமையும்.
அதேபோன்று இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கான இடத்தில் படையினர் முகாம் அமைத்துள்ளனர். இந்த நிலையில் அபிவிருத்தியை எட்டமுடியுமா என்பதும் கேள்விக்குரியதே. எனவே குறித்த விடயங்கள் தொடர்பில் படையினர் கவ னம் செலுத்த வேண்டும் என்றார்.