SuperTopAds

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதம்!

ஆசிரியர் - Admin
தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதம்!

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது.     

இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) கட்டப்பட்டமையை யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இராணுவம் போர்க்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் உள்ள வீடுகள், இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றை இடிப்பதற்கும் தரைமட்டமாக்குவதற்கும் இவர்களுக்கு யார் உத்தரவு கொடுத்தது?

அண்மையில் புதிய ஜனாதிபதி “மக்களுடைய காணிகள் மக்களுக்கே வழங்கப்படும்” என்று வழங்கிய வாக்குறுதியின்படி மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படுமா?

நீதிமன்றத் தீர்ப்புக்கள் மதிக்கப்படாது கட்டுமானப் பணிகள் பாதுகாப்பு படையினரின் அனுசரணையில் நடக்கும்போது (உ+ம்: குருத்தூர் மலை விவகாரம்) தையிட்டி விகாரை விவகாரத்தில் காணி உரிமையாளர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே.

ஆனால், தையிட்டி விகாரை விவகாரம் இதுபோன்றே வேறு இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனை இடித்து அகற்றினால் பிரச்சினை தீருமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இடிப்பதால் தென்னிலங்கையில் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளால் பிரச்சினை இன்னமும் மோசமாகும் என்பதே யதார்த்தம்.

அத்துடன் மத நல்லிணக்கம் எட்டாக்கனியாகிவிடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்புக்களை எல்லா இடங்களிலும் எல்லா மக்களும் (பாதுகாப்புப் படையினர் உட்பட) மதித்து நடப்பது சாத்தியப்படக்கூடிய வழிமுறை என்று நாம் கருதுகிறோம்.

வடக்கு, கிழக்கில் போர் முடிவுக்கு வந்து 16 வருடங்களாகியும் இன்னமும் பெருமளவில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் அடிப்படை மனித உரிமைகளையும் மதித்துச் செயற்படும்போது அது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற கள நிலையை உருவாக்கும் என குறிப்பிட விரும்புகிறோம் என்றுள்ளது.