SuperTopAds

யாழ்.பொது நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

ஆசிரியர் - Admin
யாழ்.பொது நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட கறைபடிந்த வரலாறு யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கும், நூலகத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு.

பாதனிகளை கழற்றி வைத்து விட்டு தான் தமிழர்கள் நூலகத்துக்குள் செல்வார்கள். ஆகவே யாழ் நூலகத்தின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன் என ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் யாழ் நூலகம் தொடர்பில் ஜனாதிபதி விசேடமாக சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்காக ஒரு நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு எங்கும் பதிவாகவில்லை.ஆனால் யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்காக தமிழ் மக்கள் உயிராக நேசிக்கும் யாழ் நூலகம் எரிக்கப்படட கறை படிந்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் யாழ் மக்கள் நூலகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.

அவர்கள் நூலகத்திற்கு செல்லும் போது செருப்பைக் கழற்றி வெளியில் விட்டு செல்வது எனக்கு நன்றாகத்தெரியும். அந்தளவுக்கு அவர்கள் நூலகங்களை நேசித்தார்கள். அவ்வாறு அந்த மக்களின் உணர்வுடன் கலந்த நூலகம் எரிக்கப்பட்டமை நாட்டிடை உலுக்கிய நிகழ்வு. இதற்கு நாம் நியாயம் வழங்க வேண்டும்.

யாழ்ப்பாணம் மற்றும் அயலிலுள்ள தீவுகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான வாசகர்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த வாசகர்களின் நலனுக்காக உட்கட்டமைப்பு போதுமான அளவு மேம்படுத்தப்படவில்லை.

இந்த நூலகத்திற்கு கணினிகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை வழங்க இந்த வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.

மேலும் ஏனைய பிராந்திய நூலகங்களின் அபிவிருத்திக்காக இவ் வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் இன்னும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன் என்றார்.

யாழ் நூலக அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கு சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் வரவேற்பளித்தனர்.