GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?
![GovPay மூலம் பணம் செலுத்துவது எப்படி தெரியுமா?](https://jaffnazone.com/storage/images/2025/02/IMG_1170.png)
அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையாக 'GovPay' எனப்படும் கட்டண வசதி இன்று (7) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
'GovPay' திட்டத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவை இணைந்து ஆரம்பித்துள்ளன.
இதன் கீழ் முதல் கட்டமாக, இன்று முதல் 16 முக்கிய அரச நிறுவனங்களில் பொது சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது பொது மக்கள் ஒன்லைனில் பணம் செலுத்த முடியும்.
இந்த நிறுவனங்களில் சில நகர சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா நகர சபை, யாழ்ப்பாண பிரதேச செயலகம், கேகாலை பிரதேச செயலகம், மஹர பிரதேச செயலகம், ரம்புக்கனை பிரதேச சபை, இரத்மலானை பிரதேச செயலகம் மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம் ஆகியவை குறித்த நிறுவனங்களாகும்.
மேலும், துறைமுக அதிகாரசபை, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் நம்பிக்கை மேம்பாட்டுக் குழு, அணுசக்தி ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம், ஆயுர்வேதத் திணைக்களம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியவையும் 'GovPay' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், ஜனாதிபதி நிதிய சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு விரிவுபடுத்தும் பணியும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1978 முதல் தற்போது வரை, ஜனாதிபதி நிதியத்துக்கான விண்ணப்பங்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் ஒன்லைனில் பெறுவதற்கான EBMD வசதி ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது திட்டமாகும்.