SuperTopAds

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சித்தார்த்தன்!

ஆசிரியர் - Admin
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சித்தார்த்தன்!

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சுவரை, தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும், நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம். 

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் தீவிரம் பெற்ற, எம் இனத்திற்கு எதிரான திட்டமிடப்பட்ட இன ஒடுக்கல் நடவடிக்கைகள் காரணமாக அன்றைய தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்த போது மிகத் தீவிரமாக செயற்பட்டவர்களில் மாவை அண்ணரும் ஒருவராவார். 

தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களுடனும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த பிரபாகரன் அவர்களுடனும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்ததோடு நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் உதவிகளையும் செய்திருந்ததோடு, அவர்கள் பிரிந்த பின்பும் இருவருடனும் தனித்தனியாகவும் தொடர்புகளை வைத்திருந்தார். 

அதேநேரத்தில், தந்தை செல்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அரசியல் போராட்டங்களிலும் தந்தை செல்வா அவர்களுக்கும் அண்ணர் அமிர்தலிங்கம்  அவர்களுக்கும் மிகவும் நம்பிக்கைக்குரியவாராக தொண்டனாக தொடர்ச்சியாக பங்குபற்றியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக பத்துத் தடவைகளுக்கு மேற் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக  அரச படைகளின் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்திருந்தார். இன்று அவர் சந்திக்கும் வலிதான உடல் உபாதைகளுக்கு அன்று அவர் அனுபவித்த சித்திரவதைகளும் ஒரு காரணமாகும்.

மாவை அண்ணர் அவர்களை இழந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவருடனும் எமது துயரங்களை பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.