மனமுடைந்த அர்ச்சுனா – இனி அனுர அரசுக்கு ஆதரவு இல்லை!

அரசாங்கத்திற்கு தான் வழங்கும் ஆதரவை முற்றாக விலக்கிக்கொள்வதாக தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இனி தான் உண்மையான எதிர்க்கட்சியினராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ளன. இந்நிலையில் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்ற முறைப்பாடு 36 நாட்கள் கடந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படுபவர் மக்களின் பிரச்சினைகளை கதைப்பதற்காக இங்கே நேரம் ஒதுக்கப்பட வேண்டும். நான் முறைப்பாடு செய்து 36 நாட்களின் பின்னர் எனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதனை கூறுவதற்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எனது முறைப்பாட்டின் பின்னர் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எனக்கு அடித்தார் என்பதற்காக குழு அமைக்கப்பட்டது. அந்த முறைப்பாடு அன்றே முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் கூறிய விடயம் தொடர்பில் குழு அமைக்கப்படவும் அதற்கான கேள்விகளும் கேட்கப்படவில்லை.
66 நாட்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இடமளிக்கப்படவில்லை என்றால் அது அரசாங்கத்தின் வெட்கம் கெட்ட செயலாகும். ஏன் சாதாரணமான சுயேட்சைப் பாராளுமன்ற உறுப்பினருக்கு இவர்கள் பயப்பட வேண்டும். ஏன் அவர்கள் அது தொடர்பான குழுவொன்றை அமைக்க முடியாது உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பெரிய எதிர்பார்ப்பில் இருந்தேன். யாழ்ப்பாண மக்கள் இந்தக் கட்சியில் இருந்து மூன்று எம்.பிக்களை எதிர்பார்ப்புடன் தெரிவு செய்துள்ளனர். எனக்கு ஏன் பேச இடமளிப்பதில்லை. ஏன் அரசாங்கம் பயப்படுகின்றது. உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இன்றிலிருந்து அதனை தீர்த்துக்காட்டுங்கள் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய அர்ச்சுனா;
“இப்போதிலிருந்து நான் இந்த அரசின் எந்தவொரு செயலுக்கும் ஆதரவு வழங்க மாட்டேன்.. தமிழ் மக்கள் NPP அரசாங்கத்தினை வரவேற்றனர். அதில் நானும் ஒருவன்.. ஆனால் எல்லாம் வேஷம்.. சிங்கள எம்பிக்கு ஒரு சட்டம் தமிழனுக்கு இன்னொரு சட்டமா?”
“இம்முறை நான் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அதற்கு முன் நான் வைத்தியராக இருந்தேன். ஊடகங்களில் எனது நடத்தை குறித்து ஏதேனும் முறைப்பாடுகள் வந்துள்ளதா? அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு வழக்காவது ஏன் மீது இருந்ததா? தேடிப்பாருங்கள்.. ஏன் எனக்கு நேரத்தினை ஒதுக்கித் தருவதில்லை? என்னை ஏன் புலி புலி என்று கூறுகிறீர்கள்? நான் புலியாக இருந்தால் என்னை கைது செய்யுங்கள்.. இல்லையென்றால் சுட்டுத்தள்ளுங்கள்.. நீங்கள் கொலை செய்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த அரசு முன்னர் கொலையாளிகள் என்பதை மறந்துவிட வேண்டாம்.. இந்த அரசு கொலைகார அரசு… மன்னார் நீதிமன்றுக்கு முன்பாக இருவர் கொலை செய்யப்பட்டார்கள். தெஹிவளையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.. என்னையும் கொலை செய்தால் அதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும், அரசு பொறுப்பேற்க வேண்டும்..”