ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
“தமது குடும்பத்தின் பொருளாதார மேம்பாடு கருதி வேலைவாய்ப்புக்காக இலங்கையர்கள் சட்ட ரீதியாகவும், சட்டவிரோதமான முறையிலும் வெளிநாடுகளுக்குச் செல்ல முற்படும்போது வெளிநாட்டு முகவர்களினால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன.
இந்த நாட்டு தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் இவ்வாறு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் எம்மிடம் முறையிட்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்துகின்றார்கள்.
இதற்கமைய அதிர்ஷ்ட ராஜா கேமஸ் விதூஷன் – யாழ்ப்பாணம், பகிரதன் – கரவெட்டி, சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் – முல்லைத்தீவு, பிரதாப் – யாழ்ப்பாணம், சிவேஸ் – யாழ்ப்பாணம், ஆகியோர் முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் 2022.10.20 ஆம் திகதி ரஷ்யா – பெலராஸ் எல்லையில் விஜயகுமார் முகுந்தன் காணாமல் போயுள்ளார். இவருக்கு நேர்ந்தது என்னவென்பது இதுவரை தெரியவில்லை.
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள இலங்கையரின் எண்ணிக்கை, உயிரிழந்துள்ளவர்களின் விவரம் மற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்பதை அரசு அறிவிக்க வேண்டும்.
ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சொல்லொணாத் துயரங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். தமது உறவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். ஆகவே, நெருக்கடிக்குள்ளாகியுள்ள எமது நாட்டவர்களை மீட்க அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” – என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, “இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தரவு அடிப்படையில் பதிலளிக்க வேண்டும். ஆகவே, ஒரு வார கால அவகாசம் தாருங்கள்.” – என்றார்.
மீண்டும் எழுந்து உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், “முன்வைக்கப்பட்டுள்ள இந்த விடயத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு அரசு ஒரு வார காலத்துக்குள் சிறந்த பதிலை வழங்க வேண்டும்.” – என்றார்.