பலாலிக்கு ஒரு வருடம் வரிச்சலுகை நீடிப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2026.01.30 வரை நீடித்தல்.
• கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு (இரத்மலான) திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரியில் 50% வீதக் கட்டணத்தை கையுதிர்க்கும் சலுகையை 2025.03.27 தொடக்கம் ஒருவருட காலத்திற்கு நீடித்தல்.
• மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள விமானப் பயண நேர அட்டவணைக்கமைவான விமான சேவைகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள புறப்படுதல் வரிக்குரிய சலுகையை முழுமையாக வழங்குவதை 2024.12.29 தொடக்கம் மேலும் ஒருவருட காலத்திற்கு நீடித்தல்.
நேற்று (06.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான சர்வதேச விமான சேவைகளை கவர்ந்திழுக்கும் நோக்கில் வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியால் சர்வதேச விமான நிலைய சேவைகளுக்கான ஊக்குவிப்புச் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விமான நிலையங்களுக்கு புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.