SuperTopAds

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது!

ஆசிரியர் - Admin
நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த நால்வர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 24ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகத்திற்கு சென்ற கூலித் தொழிலாளி ஒருவர், நிலத்தில் இருந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் கொடுத்து, அதை தவற விட்டவரிடம் கொடுக்குமாறு கூறினார்..

பின்னர் இரண்டு தினங்கள் கழித்து வந்து “அந்த தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட்டீர்களா?” என வினவிய வேளை அவர்கள் இல்லை என்றனர். மீண்டும் இரண்டு தினங்களுக்கு பின்னர் குறித்த நபர் வந்து அந்த வெதுப்பகத்தில் விசாரித்தவேளையும் அந்த ஆபரணம் உரியவரிடம் சேரவில்லை என்ற விடயம் தெரிய வந்தது.

இந்நிலையில் அவர் அது குறித்து விசாரித்தவேளை அங்கு இருந்த கும்பல் அவரை கட்டி வைத்து தாக்குதல் நடாத்தியது. பின்னர் வீதியில் சென்றவர்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பம் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ. தனபால அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறான பின்னணியில் நான்கு சந்தேகநபர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருடப்பிறப்பு தினத்தில் மதுபோதையில் இருந்ததால் அந்த தாக்குதலை நடாத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.