SuperTopAds

மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

ஆசிரியர் - Admin
மருதங்கேணியில் உயிரை பறிக்கும் அபாயத்தில் வடிகால் அமைப்பு!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வடிகால் அமைப்பு ஒன்று கிராம மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகால் அமைப்பானது சுமார் 5அடி ஆழமும் 150mநீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இன்று(2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம வாழ் மக்கள் குறிப்பிடுகையில்

ஏறத்தாழ 5வருடமாக குறித்த வடிகால் அமைப்பு இவ்வாறே உள்ளது.மழை காலத்தில் நீர் தேங்கி நிற்பதுடன் நீரின் தேக்கம் வீதியினையும் வடிகாலமைப்பையும் மூடி நிற்கின்றது.

நீரானது மழை காலத்தில் பாய்ச்சலை மேற்கொள்ள முடியாதவாறு இரு பக்கமும் மூடி இருப்பதால் நீர் அவ்விடத்திலே தேங்கி நிற்கின்றது.தமது கிராமத்தில் சிறுவர்கள் இருப்பதால் அவர்கள் அவ் வடிகாலமைப்பில் விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

அதனை விட இவ் நீர்த்தேக்கத்தில் நுளம்புகள் அதிகளவு பெருகுவதால் நுளம்பினால் ஏற்படும் நோய்களும் தமக்கு ஏற்படுவதாகவும்இவ் வடிகாலமைப்பினை பூரனமாக புனரமைப்பு செய்து தருமாறும் இல்லை எனில் மணல் இட்டு அதனை சமப்படுத்தி தறுமாறும் கேட்டுக்கொள்வதோடு

குறித்த வடிகால் அமைப்பானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் திட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையிலும் நிறைவு பெறவில்லை எனவும் இதுவரை காலமும் குறித்த கிராமத்திற்குரிய சுகாதார பரிசோதகர் சென்று பார்வையிடவில்லை எனவும் குறிப்பிட்டனர்

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் தொலைபேசியில் மருதங்கேணி பிரதேச செயலரிடம் இது தொடர்பாக கேட்ட பொழுது தனது பணியாளரை உடனடியாக குறித்த இடத்திற்கு அனுப்புவதாக கூறி இரண்டு மணித்தியாலங்கள் ஆகியும் குறித்த இடத்திற்கு எந்த உத்தியோகத்தரும் வராதவிடத்து ஊடகவியலாளர்கள் நேரடியாக சென்று பிரதேச செயலரை சந்தித்ததும் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்னர்.வருகை தந்த உத்தியோகத்தர்கள் தமக்கு இந்த வடிகால் அமைப்பு இருப்பது இதுவரையும் தெரியாது என்றும் சீர் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர்

தொடர்ந்து பொது சுகாதரபரிசோதகரிடமும் தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் விடயத்தை தெரிவித்ததும் உடனடியாக வருகைதருவதாக கூறி அவர்களும் வருகைதராதவிடத்து ஊடகவியலாளர்கள் நேரடியாக சென்ற பின்பு பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் வடிகால் அமைப்பை பார்வையிட்டதை தொடர்ந்து இது தொடர்பாக கிராமத்திற்குரிய சுகாதார பரிசோதகர் இதுவரையிலும் தன்னிடம் வடிகால் அமைப்பு தொடர்பான அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை என்றும் இது உயிருக்கு அச்சுறுத்தலான வடிகால் அமைப்பு என்றும் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக எமது ஊடகவியலாளர்கள் குறித்த கிராமத்தின் கிராம சேவகரிடம் தொலைபேசியில் விடயத்தை தெரிவித்ததும் கிராம சேவகர் அவர்கள் பருத்தித்துறை பிரதேச சபையின் மருதங்கேணி கிளையினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த இடத்திற்கு உடனடியாக வருகை தந்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள் குறித்த வீதியானது தங்களுடைய சபைக்கு கீழ் இல்லை என்றும் தமக்கு இதுவரையிலும் வடிகால் அமைப்பு தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பாக முறையாக தமக்கு தகவல் கிடைத்தால் தங்களால் முடிந்ததை நிச்சயமாக செய்யமுடியும் என்றும் தெரிவித்தனர்.

குறித்த கிராமம் மற்றும் பிரதேசம் சார் தொடர்பான அதிகாரிகளின் அசமந்தபோக்கே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது எதிர்காலங்களில் உயிராபத்துக்கள் ஏற்பட்ட பின்பு உத்தியோகத்தர்கள் வருகைதந்து எந்தவிதமான பயனும் இல்லை உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து வடிகால் அமைப்பை சீர் செய்தால் எதிர்காலத்தில் ஏற்பட்டிருக்கும் உயிராபத்து போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியுமெனவும் அப்பகுதி மக்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.