SuperTopAds

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நேற்று வரை ஏறத்தாழ 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது.

இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.