ஒருநாள் காய்ச்சல் என்றாலும் அவதானமாக இருங்கள்! யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர்..
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
'யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது.
இக் காய்ச்சலானது எலிக் காய்ச்சலாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இக் காய்ச்சல் எந்த வகையானது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். எலிக்காய்ச்சலானது மழை வெள்ளத்தில் எலி, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் எச்சங்கள் கலப்பதன் மூலம் இந்நோய்க்கிருமிகள் வெள்ள நீரில் கலக்கின்றன.
பொதுமக்கள் இந்த வெள்ளநீருடன் தொடுகை ஏற்படும் போது அவர்களது தோலிலுள்ள சிறு காயங்கள், புண்கள் மூலம் உடலின் குருதிச் சுற்றோட்ட தொகுதியை சென்றடைந்து எலிக்காய்ச்சல் நோய் உண்டாகின்றது.
மேலும் இக்கிருமிகள் கலந்த அசுத்தமான நீரைப் பருகுவதனாலும் எலிக்காய்ச்சல் நோய் ஏற்படலாம். இக்காய்ச்சலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு பின்வரும் விடயங்களை பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையை நாடவும்.
காய்ச்சல் ஏற்பட்டு தாமதமாக அரச வைத்தியசாலைகளுக்கு வருகை தந்தமையினாலேயே பெரும்பாலான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மருத்துவ ஆலோசனையின்றி நேரடியாக மருந்தகங்களில் மருந்துகள் வாங்கிப் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
தற்போதைய காலப்பகுதியில் அவசியமின்றி வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும். வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் கால்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிந்துகொள்ள வேண்டும்.
கால்களில் காயங்கள் அல்லது புண்கள் உள்ளவர்கள் வெள்ள நீரில் இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும். கட்டாயமாக கொதித்து ஆறிய நீரைப் பருகவும். வெள்ள நீரினால் அசுத்தமான கிணறுகளை இறைத்து குளோரின் இடவும்.
தற்போதைய காலப்பகுதியில் வெள்ள நீரால் நிரம்பியுள்ள குளங்களில் குளிப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் மேற்படி ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.