இடர் நிலைமையினை எதிர்கொள்ள தயார் நிலையில் வடமாகாணம்...
எதிர்வரும் நாட்களில் வட மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமானால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தனர்.
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர்,
எதிர்வரும் நாட்களில் தாழமுக்கமொன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லை. ஆயினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.
பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் - செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்தில் உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்பரவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்ட ரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின், பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இந்தப் பணிகளை செய்யுங்கள்.
மேலும், பல இடங்களில் வாய்க்கால்களுக்குள்ளும் வீதிகளிலும் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் வழி.
பல தடவைகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை ஊடாக தண்டிக்கவேண்டும் என்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாவட்ட மருத்துவமனை ஊடாக செல்லும் கால்வாய் துப்புரவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மாவட்டச் செயலர், மக்கள் இடரின்போது இடம்பெயர நேரிட்டால், அவர்களை தங்க வைப்பதற்குரிய நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கால்வாய்கள் அனைத்தும் ஏற்கனவே துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.
நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் கூறுகையில்,
யாழ். மாவட்டத்தில் நேற்று 6 மணிநேரத்தினுள் 130 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.
யாழ். மாவட்டத்தின் உப்பாறு மற்றும் தொண்டமனாறு நன்னீரேரிகளினதும் வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்படும் நிலையில், அதை கருத்தில் கொண்டு அவை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது. 350 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும். இருப்பினும், நீர் வெளியேற்றும் பிரதேசத்துக்கு வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றார்.
இடர் நிலைமை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான வீதிகளை அண்மித்து மக்களின் வீட்டு மதில்கள் அமைந்திருப்பதன் காரணமாக வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வழிமுறைகளை உருவாக்க முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
குறிப்பாக, வீடுகள் மற்றும் மதில்கள் அமைப்பதற்கான அனுமதியை பெற்ற பின்னர், அதற்கு முரணாக அவற்றை அமைப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. எனவே, அனுமதியை வழங்குவது மாத்திரமின்றி, அவற்றை தொடர் கண்காணிப்புக்கும் உட்படுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் இதன்போது குறிப்பிட்டார்.
இடர் நிலைமையின்போது தீவகத்தில் உள்ள நோயாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும், கடல் மார்க்கமாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் விமானப்படையினர் உதவவேண்டும் என்றும் சுகாதார பணிப்பாளர் கோரிக்கை விடுத்தார்.
அவ்வேளை, கடற்படையினர் தமது உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர்.
குறிகாட்டுவான் இறங்குதரையிலிருந்து பயணிகளை ஏற்றி இறக்கும் இரண்டு படகுகளையும், புயல் நிலைமை ஏற்பட்டால் பாதுகாத்து தருவதற்கு கடற்படையினரின் உதவியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கோரினார். அதற்கும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர்.
கால்நடைகள் கடந்த காலத்தில் இடர் நிலைமையில் அதிகளவில் உயிரிழந்தமையை கருத்தில்கொண்டு, கால்நடைகளை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதற்குரிய ஒழுங்குகள் கண்டாவளை மற்றும் நானாட்டானில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
வீதிகளில் குப்பை போடுபவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என வட மாகாண சிரேஷ்ட பதில் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் குப்பை போடுபவர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதற்குரிய வர்த்தமானி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மாநகர சபை சார்பில் பங்கேற்ற பிரதிநிதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரப் பகுதிகளில் இராணுவத்தினர் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மக்கள் மீண்டும் மீண்டும் அங்கு குப்பைகளை போடுவதாகவும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கவலை தெரிவித்தார்.
அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குப்பைகளை அகற்றி துப்புரவான நகராக்குவதற்கான நடவடிக்கையை தாம் யாழ். மாநகர சபையுடன் இணைந்து செய்வதற்கு பொறுப்பெடுப்பதாக உள்ளுராட்சி அமைச்சின் செயலர் தெரிவித்தார்.
இதேவேளை, இடர் நிலைமைகளை எதிர்கொள்வதற்காக கடற்படையினரின் 16 குழுக்கள் படகுகளுடன் தயாராக இருப்பதாகவும் மேலதிகமாக தேவைப்பட்டால் அதையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
எதிர்வரும் இடர் நிலைமைகளின்போது பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் எனவும், அதேநேரம் யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 0773957894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 0772320528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 0760994883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.