பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்துள்ளது - சீன தூதுவர் கீ.ஷென்ஹொங்..
அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் சமூகம் சரியான முடிவை எடுத்திருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை காட்டுகிறது. இது இனங்களிடையே ஒற்றுமையும் பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தும் ஒரு குறியீடு என இலங்கைக்கான சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சீனாவின் நீண்டகால நண்பனாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் எடுக்கும் சகல முடிவுகளையும் இலங்கை மதிக்கிறது. இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அயல் நாடாக இருக்கிறது. அதனால் இந்தியா மற்றும் இலங்கை பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதை நாம் விரும்புகிறோம். டிசம்பர் மாத இறுதியில் அனுர குமார திஸாநாயக்க இந்தியா பயணிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் சந்தோசமான விடயம். அதன் பின்னர் பொருத்தமான தருணத்தில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு வருகை தரலாம். சீனா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ரீதியான உறவு வலுப்படுவதையே நாம் விரும்புகிறோம்.
வடபகுதியில் பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை நாம் கொரோனா காலத்தில் இருந்து மேற்கொண்டு வருகிறோம். சினோபாம் தடுப்பூசி, உலர் உணவு பொருட்கள், மீன் வலை என பல உதவிகள் செய்யப்பட்டது. வடபகுதி மக்களுடன் நல் உறவை மேம்படுத்தவே விரும்புகிறோம் என்றார்.