அநுரவின் அரசியலமைப்பு ஆபத்தானது!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்போவதாகச் சொல்கின்ற புதிய அரசமைப்பு மிகமிக ஆபத்தானது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இணுவிலில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக அநுரகுமார பொறுப்பேற்ற பின்னர், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக புதியதொரு அரசமைப்புக் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார். மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தை ஓர் அரசமைப்புச் சபையாக மாற்றி புதியதொரு அரசமைப்பை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், அந்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து அரசமைப்பை உருவாக்குவேன் என்றும் அநுர தெரிவித்துள்ளார்.
ரணில் - மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு ஒற்றையாட்சியை அழுத்தமாக வலியுறுத்தும் வகையில்தான் அமைந்திருந்தது. ஆதலால், அந்த அரசமைப்புத் திட்டங்களை ஜனாதிபதி அநுர தொடர்ச்சியாக முன்னெடுக்கப் போகின்றார் என்றால், அவர் ஒற்றையாட்சி அரசமைப்பையே கொண்டுவரப் போகின்றார் என்று அர்த்தம்.
அந்த 'ஏக்கிய ராஜ்ஜிய' அரசமைப்பை தமிழர்களும், தமிழ்த் தலைவர்களும் ஏற்கக்கூடாது. மாறாக அந்த அரசமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டால், வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்கள் ஏற்ற அரசமைப்பு நடமுறைக்கு வரும் என்பதோடு, பின்னர் எக்காலத்திலும் தமிழர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் பேச முடியாத சூழல் உருவாகும் - என்றார்.