ஈ.பி.டி.பியே நல்ல தமிழ் தேசியத்தை முன்னெடுத்து செல்கின்றது – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் மட்டுமே கொள்கை உள்ளது ஏனைய தமிழ் கட்சிகளிடம் கொள்கை எதுவும் இல்லை வெறும் புலம்பல்கள் மட்டும் தான் உள்ளன. நல்ல தமிழ் தேசியத்தையும் முன்னெடுத்து செல்வது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் மாத்திரமே என கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது நீண்ட கால முயற்சியின் பயனாகவே காணி விடுவிப்புக்கள் இடம்பெற்று அண்மையில் பலாலி – அச்சுவேலி வீதியும் திறக்கப்பட்டது. குறித்த வீதி கடந்த ஆட்சி காலத்தில் விடுவிக்கப்படவிருந்த நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு காரணமாக அப்போது சாத்தியமாகவில்லை. தற்போது அந்த வீதி திறந்து விடப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்தேன். அதன் போது வனஜீவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் பேசி இருந்தேன். அதற்கு ஜனாதிபதி எங்களை விட உங்களுக்கு தான் வடக்கில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் பரீட்சயம் , நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அது தொடர்பில் பேசி முடிவுகளை எடுப்போம் என தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதியை நான் சந்தித்த போது , 38 கோரிக்கைகளை முன் வைத்திருந்தேன். ஆனால் சிலர் சென்று மதுபான சாலைக்கான அனுமதிகளை பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட கோரியும் இன்னும் சிலர் அதனை வெளியிட வேண்டாம் என கோரியுமே ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மாத்திரமே கொள்கை இருக்கின்றது. 1990ஆம் ஆண்டில் இருந்து , மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறி வருகிறோம். அது மட்டுமின்றி 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி வந்தோம். அதனை அப்போது அரசியல் கட்சிகளும் , போராட்ட இயக்கங்களும் மறுத்து வந்தனர். 13ஆம் திருத்தத்தை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என்றனர்.
மாகாண சபை முறைமையை தும்பு தடியால் கூட தொட மாட்டோம் என கூறியவர்கள் தான் மாகாண சபை தேர்தல் அறிவித்த உடன் , தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மக்களை உசுப்பேற்றி மாகாண சபையில் ஆட்சியை அமைத்தனர்
பின்னர் மாகாண சபையில் எதுவும் செய்யாது, அவர் கள்ளர் இவர் கள்ளர் என தங்களுக்குள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
தமிழர்களின் பிரச்சனை சோறா ? சுதந்திரமா ? என வந்த போது சுதந்திரமே என போராடி , சோறும் இல்லை. சுதந்திரமும் இல்லாமல் போனது எங்களை பொறுத்த வரையில் சோறும் முக்கியம் , சுதந்திரமும் முக்கியம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அப்போதே நடைமுறைப்படுத்தி இருந்தால் , தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்க வேண்டி வந்திருக்காது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மக்கள் எங்கள் கொள்கைக்காக தான் வாக்களித்து வருகின்றனர். ஈ.பி.டி.பி மீது இருந்த பயத்தினால் தான் புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கினார்கள்.
எங்களை பொறுத்தவரையில் மூன்று “அ ” க்கள் உள்ளன. ஒன்று அன்றாட பிரச்சினை , மற்றையது அபிவிருத்தி , மற்றையது அரசியல் தீர்வு இந்த மூன்று “அ” க்களே முக்கியமானவை.
ஜே.வி.பி யினர் ஆயுத போராட்டம் வழியாக இடது சாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். அதேபோல ஈ.பி.டி.பி யினரும் இடது சாரி பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான்.
நாமும் இந்த முறை தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே கொழும்பு , புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான் ஆட்சியில் பங்கெடுப்பதா இல்லையா என்ற முடிவினை எடுக்கவுள்ளோம்.
நாமும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தான் உள்ளோம். எமது நிலைப்பாடு ” குட் கொலஸ்ரோல்’ ஏனைய கட்சியின் தமிழ் தேசியமானது “பாட் கொலஸ்ரோல்” ஈகும் என மேலும் தெரிவித்தார்.