சட்டப் பயங்கரவாதமும் தூக்குக் கயிற்றில் தமிழ் அரசியலும்…
தமிழ் அரசியல் பரப்புக்குள்ளும் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிக்குள்ளும் உள்ள சட்டத்தரணிகள் என்கின்ற சட்டப் பயங்கரவாதிகளும் தமிழ் மக்களின் அழிவுக்கு வித்திட்டு பௌத்த சிங்கள சட்டப் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்தும் தொழில்பட்டு தன்னின உண்ணிகளாக உள்ளதையும் வரலாற்றில் காணமுடியும். அத்தகைய தமிழ் தேசிய இனத்திற்குள் இருந்த, இருக்கிற சட்டப் பயங்கரவாதிகள் பற்றி பார்ப்போம்.
இலங்கைத் தீவில் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் சட்டப் பயங்கரவாதம் தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அல்லது அவர்களை தமக்கு இசைவாக வடிவமைத்து தமிழினத்தை அழிக்கும் கோடாலிக் கம்புகளாக தமிழ் தலைமைகளையே பிரயோகித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டப் பயங்கரவாதத்தின் வரலாற்று வளர்ச்சியில் பல்வேறு கட்டங்களில் தமிழ் தலைவர்கள் சட்டப் பயங்கரவாதத்துக்கு உட்பட்டு தமிழினத்தை அழிவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆசிய நாடு ஒன்றுக்கு முதல் முதலில் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயக உரிமையை நடைமுறையில் அமுல்படுத்தி அல்லது பரிச்சாத்துப் பார்த்தது 1931ல் இலங்கை தீவிற்தான். அனைவருக்கும் வாக்குரிமை என்ற உயர்ந்த ஜனநாயகத்தை விஸ்தரிப்பதற்காக இலங்கை தீவில் ஏற்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் யாப்பு இலங்கையின் சட்டப் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்டது. அணுசரணையாக இருந்தது .
தனிச் சிங்கள அமைச்சரவையை தோற்றுவித்தும் அதனை நடைமுறையில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. அதனை தொடர்ந்து 1947 சோல்பெரி அரசியல் யாப்பு இனவழிப்பு என்ற அரச பயங்கரவாத செயலை கொடூரமாக நிறைவேற்றி சட்ட பயங்கரவாதத்தை துலக்கமாக வெளிக்காட்டியது.
அதனைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பும், 1978 இரண்டாம் குடியரசு யாப்பும் சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து சிறுபான்மை தேசிய இனங்களை அழித்தொழிக்கின்ற சட்டப் பயங்கரவாதத்தை இலங்கைத் தீவின் சிறுபான்மை இனங்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை தனது சட்டப்பிரமாணங்களுக்கு ஊடாகவும், அரச ஆட்சியியல் இயந்திரத்துக்கு ஊடாகவும் நிறைவேற்றி இலங்கைத் தீவை ஒரு பேரழிவுக்கு இட்டுச் சென்றது.
இத்தகைய பௌத்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் சட்டப் பயங்கரவாதத்தை துணை கொண்டு இனவழிப்பு என்ற அரச பயங்கரவாதத்தை சமாந்தரமாக ஓட்டிச் சென்றனர். தமிழ் தலைமைகள் எவ்வாறு தமிழ் மக்களை அழிக்கின்ற, தமிழர் தாயகத்தை அழித்தொழிக்கின்ற, தமிழ் மக்களுக்குரிய தேசிய அபிலாசைகளை அடைய விடாது தடுப்பதற்கு எவ்வாறு பௌத்த வாதம் தமிழ் தலைமைகளை பயன்படுத்தியது என்பதை சில உதாரணங்களுடன் பார்த்து விடுவோம்.
இன்றைய இலங்கை அரசியலமைப்பில் கட்சி தாவா சட்டம் என்ற சட்ட ஏற்பாடு இருக்கின்ற போதிலும் அவ்வாறு கட்சி தாவுபவர்களை பாதுகாக்க நாடாளுமன்றம் வழி செய்யும் என்ற ஒரு விதியையும் கொண்டுள்ளது. இந்த ஏற்பாடு உருவாவதற்கு எவ்வாறு சட்டப் பயங்கரவாதம் துணைபுரிந்தது என்பதையும் பார்ப்போம்.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை பழிவாங்கல்களுக்கு உட்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் 10-02-1979ல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மூன்று மாத காலத்துக்குள் அவருடைய பதவி காலியாவதற்கு முன்னர் இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 22-02-1979ல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு "கட்சிதாவுபவர்களை நாடாளுமன்றம் வழி செய்யலாம்" என்ற உப விதியை உருவாக்கியதோடு அதனைப் பயன்படுத்தி தனது கட்சிக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பயன்படுத்தி இராஜதுரை அவர்களுடைய நாடாளுமன்ற பதவியை தொடர்ந்து பேணுவதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே வழி செய்து 07-03-1979 ல் ஜே ஆர் ஜயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைத்ததோடு அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இங்கே இலங்கை அரசியல் யாப்பில் கட்சி சட்டங்களுக்கு அமைய ஒருவரை பழிவாங்குகின்ற அல்லது அவருடைய அரசியலை அழிக்கின்ற சட்டப் பயங்கரவாதத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்டவிழ்த்து விடப்பட்ட போது அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ராஜதுரையை பிரித்தெடுப்பதன் மூலம் கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை வலுப்படுத்தவும் தமிழர் தாயக அழிப்பை தங்குதடை இன்றி மேற்கொள்வதற்கும் ராஜதுரை தங்களுடன் இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான அதேநேரம் தமிழ் தேசியத்துக்கு எதிரான சட்டப் பயங்கரவாதத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாட்டை தொடர்ந்தது.
இங்கே ராஜதுரை பழிவாங்கப்பட்டதும் அதே நேரம் அவர் பதவி தக்க வைக்கப்பட்டதும் சட்டப் பயங்கரவாதத்தின் செயல் திறன் வலுவையும், அதன் கோர முகத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
அதற்கு அடுத்து குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சம்பவமாக 2002 ஆம் ஆண்டு ரணில் -- பிரபா ஒப்பந்தத்தின் பின்னான 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு விடுதலைப் புலிகள் தம்மை ஏகப்பிரய்திகளாக தமிழ் மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான சின்னமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்த முற்பட்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி அவர்கள் தனது கட்சி செயலாளர் நாயகத்துக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு தனி மனிதனாக நின்று அந்தச் சின்னத்தை பயன்படுத்துவதற்கு சட்டரீதியான தடையை ஏற்படுத்தினார். வடகிழக்கு தமிழர்களின் சுமார் 30 ஆண்டுகால அரசியல் கட்சி சின்னமாக இருந்த உதயசூரியன் சின்னத்தை ஒரு தனி நபர் சட்டப் பிரமாணங்களை காட்டி தடுத்தது என்பது ஒரு சட்டப் பயங்கரவாதமாகவே உள்ளடக்கப் படுகிறது.
அவ்வாறு உதயசூரியனை பயன்படுத்த முடியாத போக தமிழர் தரப்பு தமிழரசு கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தை பெற தமிழரசு கட்சியின் செயலாளர் அவர்கள் சின்னதுரையை நாடிய போது இத்தகைய தனிநபர் அதிகாரப் போக்கு இருந்த போதிலும் சமூகப் பண்பாட்டு நிர்ப்பந்தத்தின் விளைவால் சின்னத்துரை அவர்களினால் தமிழரசு கட்சியின் சின்னத்தை வழங்க வேண்டிய சூழல் தோற்றுவிக்கப்பட்டது.
அதனை அடுத்துதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக வீட்டுச் சின்னம் அறிவிக்கப்பட்டு தேர்தல் எதிர் கொள்ளப்பட்டது. 20 வருடங்களாக செயற்பாடின்றிக் கிடந்த வீட்டுச் சின்னம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையால் மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரகாசித்தது.
பின் பத்து வருடங்கள் கழிவதற்கு முன்னரே அந்தச் சின்னத்தின் கீழ் இருந்த ஏனைய அரசியல் கட்சிகளை சில கோடலிக்காம்புத் தலைவர்கள் வீட்டு சின்னத்தை தமது கையில் வைத்துக் கொண்டு ஆடிய சட்டப் பயங்கரவாதத்தின் சித்துக்களினால் கூட்டமைப்புக்குள் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்னர்.
இவ்வாறு தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தை தேசியத் தலைவர் காட்டிய சின்னம் என்று தேர்தல் வந்தால் மாத்திரமே முழக்கமிட்டுக் கொண்டு கட்சிக்குள் இருக்கிற சுமந்திரன் குழு தமிழ் தேசியயின அழிப்பதற்காக சிங்கள பேரினவாதத்திற்கு துணைபுரிகிறது. தமிழ்த் தேசிய இனம் சிதைவுக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்கிய வேளையிலும் இவர்கள் தம்முடைய பதவிகளை மாத்திரமே கருத்தில் கொண்டு ஓடுகாலி அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் தமிழரசு கட்சிக்கு ஊழ்வினைப் பயன்தானோ என்னவோ 10 வருடங்களுக்கு மேலாக தனது தலைமையை தெரிவு செய்யாமல் இருந்துவிட்டு ஜனநாயக முறைப்படி உள்ளகத் தேர்தலை நடத்தி தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வோம் என்று கட்சி ஜனநாயகம் பேசிய சுமந்திரன் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றி அடைந்த ஸ்ரீதரன் அவர்களை தலைவர் பதவியை ஏற்பதற்கு தடையாக இரண்டு வழக்குகளை முல்லைத்தீவிலும் திருகோணமலையிலும் தாக்கல் செய்த சுமந்திரன் குழுவினர் தமிழரசு கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை சட்டப் பயங்கரவாதம் கொண்டு தாக்கி முடக்கியுள்ளனர். இது தமிழரசு கட்சிக்குள் இவ்வாறு சட்டப் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இதேநிலைமை ஏனைய தமிழ் கட்சிகளிலும் இல்லாமல் இல்லை.
நீ எதிரிகளுக்காக மூட்டிய தீ உன்னையும் சுடும் என்பதற்கிணங்க தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் தமக்கிடையே முட்டி மோதி சட்டப்பயங்கரவாதத்தை இன்னும் ஒரு படி முன்னோக்கி வளர்த்துச் சென்றுள்ளனர். தற்போது 2024 நவம்பர் 14 நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சி தனது வேட்பாளர்களை தெரிவு செய்ததும் வேட்பு மனு தாக்கல் செய்ததும் தவறு, அது கட்சி சட்டப்பிரமாணங்களுக்கும் தேர்தல் யாப்பு விதிகளுக்கும் முரணானது என்று தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான மார்க்கண்டு நடராஜா அவர்கள் கடந்த பத்தாம் தேதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் மனுதாரர் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளரான பா.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரை எதிராளிகளாக பதிவு செய்திருக்கிறார் . இந்த வழக்கு நவம்பர் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என அறியப்படுகிறது.
இந்த விடயத்தை தமிழ் மக்கள் மிக ஆழமாக பார்க்க வேண்டும். ""ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து இப்போது மனிதனை கடிக்க தொடங்கிவிட்டார்கள்"" என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
இங்கே தமிழ் சட்டத்தரணி அரசியல்வாதிகள் தமது சட்டப் பயங்கரவாதத்தை தமிழ் மக்களை அழித்தொழிக்கின்ற செயல்களுக்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது.
தமிழ் தலைமைகள் எனப்படுவோர் தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை அடைவதற்காக அரசியல் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு இலங்கை அரசையும் இலங்கை அரசியல் யாப்பையும் தாங்கள் நம்பவில்லை என்று தேர்தல் காலங்களில் முழக்கமிட்டுக்கொண்டு முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றும் , அதில் ஒரு சாரார்பார் யுத்த குற்றம் என்றும் சொல்லிக்கொண்டு அதற்கான நீதியாக உள்ளக விசாரணை வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணை வேண்டுமென்றும் தமிழ் மக்கள் மத்தியில் கூக்குரல் இட்டுக்கொண்டும் அதேவேளை மறுவளத்தில் தங்கள் கட்சியின் பிரச்சினைகளுக்கும் தங்களுக்குள் ஏற்படுகின்ற சுயநல அதிகாரப் போட்டிக்கும் இலங்கை நீதிமன்றத்தை நாடி நிற்கிறார்கள்.
இலங்கை நீதிமன்றங்களை நம்ப தயார் இல்லை என்று சொன்னவர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு மாத்திரம் நீதிமன்றத்தை நாடி நிற்பது விந்தை. என்னவோ இவர்கள் உண்மையான தேசியவாதிகளாக இருந்தால் இவர்கள் உண்மையாகவே தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்க வல்லவர்களாக இருந்தால் தமக்கிடையே போட்டியின்றி ஏக மனதாக. ஒரு தலைவரைத் தெரிவு செய்திருக்க முடியும். அவ்வாறே தேர்தலுக்கான வேட்பாளர்களையும் எந்தப் பிரச்சனையும் இன்றி தமக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இதற்கு மாறாக இவர்கள் எந்தக் கொள்கையும் அற்றவர்கள் என்பதையும் , இவர்களிடம் கடைந்தெடுத்த சுயநலம் மாத்திரமே உண்டு என்பதையும் கட்சிக்குள்ளே ஆள்மாறி எதிரும் புதிருமான வழக்குகளை இலங்கை நீதிமன்றத்தில் பதிவிடுக்கிறார்கள் என்பதுவே இவர்களுடைய அயோக்கியத்தனத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற போது , அது கட்சியை முடக்கும் சூழ்நிலையில் இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் இப்போது யார் அந்த இரண்டு வழக்குகளையும் வைத்தாரோ அவருடைய தான்தோன்றித்தனமான எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவே இப்போது மூன்றாவது வழக்கு அவருக்கு எதிராகவே அவருடைய அடிவடிகளின் மீது வைக்கப்பட்டிருக்கிறது.
இங்கே இந்த வழக்கு நவம்பர் 18 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டு மனுதாரர் குறிப்பிட்ட விடயம் உண்மையானதும் சரியானதும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமேயானால் தமிழரசு கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது அல்லது வெற்றி பெறுகின்ற வேட்பாளர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை நிராகரிக்கப்படலாம்.
இலங்கை அரசியலில் பட்டங்களை வழங்குவதும், பட்டங்களை பறிப்பதும் , குற்றவாளியாக காண்பதும் , நிரபராதியாக வெளியே விடுவதுமான நீதிமன்ற தீர்ப்புகள் என்பன எல்லாமே இலங்கை அரசியல் யாப்பு அமைவான அல்லது யாப்பில் இருக்கின்ற ஓட்டைகளுக்குள்ளால் பயங்கர சட்டப் பயங்கரவாத தாக்குதல்களாகவே நிகழ்கின்றன. இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது எதிர் வருகின்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு அளிக்கின்ற வாக்குகளை பயனற்றதாக ஆக்கக்கூடிய வல்லமை தமிழ அரசியல் தலைவர்கள் எனப்படுவருடைய சட்டப் பயங்கரவாத தாக்குதலால் நிகழக்கூடும். அவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இங்கே சுமந்திரன் குழு தமிழரசு கட்சிக்குள் தமது அதிகாரத்தை வலுப்படுத்தவும் தமிழரசு கட்சியை தமது தான்தோன்றித்தனமான போக்கிற்கு வழிநடத்திச் செல்லவும் தமது எதேச்சதிகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும் மேற்கொண்ட சட்டப் பயங்கரவாத தாக்குதலின் பக்க விளைவு இப்போது அவர்களையே ஆட்டம் காண செய்துவிட்டது. நீ எதிரிக்காக மூட்டிய தீ உன்னையே அதிகம் சுடும் என்பதற்கிணங்க இப்போது சுமந்திரன் குழுவினர் வேள்வி கடாவாக வேள்விப் பலிபீடத்தில் தங்கள் கழுத்தை நீட்டி நிற்கிறார்கள்.
இறுதியாக தமிழரசு கட்சியின் தலைமை பீடத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட சட்டப் பயங்கரவாதம் இன்னும் ஒரு பரிமாணத்தையும் கொண்டுள்ளது. சட்டத்தரணிகள் தமக்குள்ளேயே மோதி யார் வல்லவர் என்பதை நிரூபிப்பதற்கு தமக்கான வாய்ப்பாகவே எதிரெதிர் மனுதாரும் எதிராளியுடைய சட்டத்தரணிகளும் விளங்கப் போகிறார்கள். அனேகமாக இங்கே இரண்டு சட்டத் தரணிகளும் தமிழ் மக்களின் அரசியலை அஸ்தமனம் செய்கின்ற சட்டப் பயங்கரவாத தாக்குதலையே யாழ்ப்பாணத்தின் நீதிமன்றத்தில் நடத்துவார்கள் என்பது திண்ணம். இவர்களுடைய இந்த சட்டப் பயங்கரவாத தாக்குதல்கள் தமிழ் மக்களை தமக்குள்ளே அழிப்பது மாத்திரமல்லாமல் சிங்கள தேசம் தமிழினத்தை இலங்கைத் தீவில் இல்லாது அழித்தொழிப்பு செய்வதற்கான அனைத்து வகையான வாய்க்கால்களையும் வழங்கிவிடுகின்றது என்று சொல்வதே பொருந்தும்.
முற்றும்.
நன்றி : தி. திபாகரன், M.A. 17-10-2024.