அறுகம்பே தாக்குதல் திட்டம், இஸ்ரேலியர்களே இலக்கு..
அறுகம்பே உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வௌியானாலும் இஸ்ரேலியரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் திட்டமிப்பட்டுள்ளதாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்கு இஸ்ரேலியர் அல்லாத வெளிநாட்டவர்களோ, இலங்கையர்களோ அல்லது வேறு எந்த நாசகார செயலும் அல்ல என தகவல் வௌியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, தாக்குதல் திட்டம் தொடர்பில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவை பெற்றுள்ளனர்.
“அடுத்தடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் கைதுகள் மூலம்தான் இது தொடர்பாக கூடுதல் பாதுகாப்பை ஈடுபடுத்த வேண்டும் என்பது தெரியவந்தது.
அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டதற்கு முந்தைய நாள் இரவிலிருந்தே பொத்துவில் பொலிஸ் பகுதியில் பாதுகாப்பை நிலைநிறுத்தியிருந்தோம்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர், இராணுவம் மற்றும் கடற்படையினர் கூட கடல் பயணங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
“அறுகம்பேக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அதை தவிர, இலங்கைக்கு செல்ல வேண்டாம் என எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை”.
இலங்கைக்கு மேற்கொள்ளப்படலாம் என்ற தாக்குதலின் தன்மையின்படி, அது பயங்கரவாதச் செயலாக இதுவரை நாம் அவதானிக்கவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக, இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எங்கும் ஆபத்துக்கள் ஏற்படலாம்.
அதனால்தான் இது இலக்கு தாக்குதல் என்று அழைக்கப்பட்டது.
அது தவிர, வேறு நாட்டில் உள்ள வெளிநாட்டவரை குறிவைத்து அல்லது இலங்கையர்களை குறிவைத்து அல்லது ஒரு நாசகார செயலோ அல்ல".
"இருப்பினும், இந்த தாக்குதலின் தன்மை குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.
தாக்குதல் திட்டம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே விசாரிக்கப்பட்டு சில உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, இறுதியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இலங்கையர்கள். தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் சரியான தகவல்கள் வெளியாகியவுடன் அதனை ஊடகங்களுக்கு வழங்க முடியும்.
ஆனால் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வௌியிட்டன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.