வடக்கில் தென்னிலங்கை கட்சிகள் கால் பதிப்பது ஆபத்தானது! உரிமையும் - பொருளாதார முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு மிக அவசியம் - மணிவண்ணன்..

ஆசிரியர் - Editor I

கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இருந்தவர்களை புறம் தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்பு தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கி உள்ளோம். இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகின்றது.

தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும். என்ற எண்ணத்தோடு உள்ளார்கள். அதனால், தென்னிலங்கையில் இருக்கு கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகி உள்ளனர். 

ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேராவவுடன் கணபப்டுகிறனர். வடக்கில் எமது கட்சி தலைவர் சி.வி விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். 

மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாஎ நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தவர்களை ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். 

தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காது , செயற்படுவோம். தமிழ் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்து செல்வோம். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்து சென்ற அதேவேளை , 

பொருளாதாரத்தையும் முன்னெடுத்து சென்றோம் நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த கால பகுதியில் தான் கொரோனா தொற்றும் அதனை தொடர்ந்து , பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. 

அவ்வாறான இடரான கால பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம். நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன் தான் காணப்படுகின்றன. 

எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார். 

குறித்த ஊடக சந்திப்பில் அக் கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும் போது, 

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு , பொருளாதாரத்தை நோக்கி செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும் போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதர பலமும் காணப்பட்டது. அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. 

எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்ச கணக்கான மக்களைஇழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது. தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். 

ஆனால் அடுத்து வருவோர்களும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை. மீண்டுமொரு இனக்கலவரமோ , தனி சிங்கள சட்டமோ கொண்டு வரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாளுவது ?ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு