SuperTopAds

வடமாகாண கடற்றொழிலாளர்களின் குரலாக ஒலிப்போம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கடற்றொழிலாளர்களின் குரலாக ஒலிப்போம்..

வடமாகாண கடற்தொழிலாளர்கள் மற்றும் வடக்கில் வாழும் மலையக தமிழர்களுக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி , அவர்களின் குரலாக நாடாளுமன்றில் எங்கள் குரல்கள் ஒலிக்கும் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் கண்ணாடி சின்னத்தில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் நேற்றைய தினம்  திங்கட்கிழமை யாழில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் உயர்த்தப்பட வேண்டும். அதேபோன்று வடக்கில் வாழும் மலையக தமிழர்களின் வாழ்வாதாரங்களும் மேம்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அரசியல்வாதிகள் எங்களை சந்திக்க வருவார்கள். எமது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதாகவும் , பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகளை வழங்கி செல்வார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் எங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.

எனவே தான் எங்கள் கிராமங்களில் , எங்கள் சமூகங்களில் நடக்கும் பிரச்சனைகளையும் நாடாளுமன்றில் நாமே எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என மேலும் தெரிவித்தார்

குறித்த நிகழ்வில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உரையாற்றுகையில்,

கடந்த ஜனாதிபதி தேர்திலில் சஜித் பிரேமதாவிற்கு வேலை செய்தோம். அதன் போது அவர்களுடன் எமது உடன்படிக்கை அவர்களின் கூட்டணி கட்சியில் யாழ்ப்பாணத்தில் எமக்கு ஒரு ஆசனம் தர வேண்டும் என்பது. அதன் அடிப்படையிலையே அவருக்காக நாம் உழைத்தோம்.

எம்மை ஏமாற்றி சமத்துவ மக்கள் கட்சியினருக்கு ஆசனங்களை வழங்கியுள்ளனர். அரசியல் சூழ்ச்சியால் எமக்கு ஆசனம் வழங்கப்பட்டவில்லை. அதனால் தான் நாம் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கூட்டணியில் இணைந்தோம். இக் கூட்டணியிலும் எமக்கு ஒரு தேசிய பட்டியல் கேட்டு இருக்கிறோம்.

பாட்டாளி மக்கள் மற்றும் கடற்தொழில் மக்கள் பிரதிநிதித்துவத்தை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெறுவோம்.

சஜித் தரப்பினர் பாட்டாளிகளான எம்மை ஏமாற்றி விட்டனர். எமக்கு துரோகம் இழைத்து விட்டனர்.

நாம் இந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உண்டு. உழைக்கும் பாட்டாளி மக்களின் எதிர்காலத்திற்காக நாம் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என மேலும் தெரிவித்தார்.