தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம்...

ஆசிரியர் - Editor I
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய தீர்மானம்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

விசாரணைகள் நிறைவடையும் வரை வினாத்தாள் திருத்தப்படமாட்டாது. எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

மாணவர்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டோம் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி ஊடாக பகிரப்பட்டுள்ளமை மற்றும் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே கேள்விகள் வெளியாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பெற்றோர் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

பரீட்சை கடமையின்போது முறையற்ற வகையில் செயற்பட்டதாக குறிப்பிடப்படும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக தாபன விதிக்கோவைக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் கூடிய கரிசணை கொண்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டு  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் கல்வி அமைச்சின் மட்டத்திலும் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சையை மீண்டும் நடத்துமாறும், தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் புள்ளிகளை வழங்குமாறும் குறிப்பிடப்படுகிறது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அறிக்கை, கல்வி அமைச்சின் ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விசாரணை அறிக்கைகள் கிடைக்கும் வரை பரீட்சை வினாத்தாள் திருத்தப்படமாட்டாது.  மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கு தேவை ஏற்பட்டால் மீண்டும் பரீட்சையை நடத்துவோம். 

எவரேனும் முறையற்ற வகையில் செயற்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கமாட்டோம். 

ஆகவே, பெற்றோர் அமைதியுடன் செயற்பட வேண்டும் என வினையமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு