தமிழரசுக் கட்சிக்குள் தொடரும் இழுபறி நிலை! மேல் மட்ட தொண்டர்களது வளர்ந்து வரும் அதிருப்தி !
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பில், முதன்மைப் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் அதிருப்தி நிலவுகின்றது.
ஒற்றுமை என்ற பெயரில், பங்காளிக் கட்சிகளுக்கு அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை, கூட்டமைப்பின் தலைமை மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் உயர் பீடத்தினர் தாரைவார்த்துள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் முதல் சுற்றில் 80 சதவீத இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இரண்டாம் சுற்றில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கமும் இல்லாமல்போனது.
இதனையடுத்து பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோ, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து ஏற்பட்ட பிணக்கை சரிசெய்யும் நோக்குடன், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டது.
எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்காளிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகள் கோரியதற்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக உள்ளுர் தலைவர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல், கட்சித் தலைமை உள்ளூராட்சி மன்றங்களைத் தாரைவார்த்துள்ளதாக அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். மன்னார் நகர சபை ரெலோவுக்கு முன்னர் வழங்கப்பட்டது. கடும் எதிர்ப்பை அடுத்து பின்னர், இரண்டு ஆண்டுகள் தமிழ் அரசுக் கட்சிக்கும், எஞ்சிய இரண்டு ஆண்டுகள் ரெலோவுக்கு என்று மாற்றப்பட்டது.
ஆனால் இந்தத் தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினர் போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சித் தலைமைக்கு எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசனப்பங்கீட்டை ஏற்கமுடியாது என்றும், இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.