SuperTopAds

முன்னாள் அமைச்சர் தி.மகேஷ்வரன் படுகொலைக்கு காரணம் ஈ.பி.டி.பி..

ஆசிரியர் - Editor I
முன்னாள் அமைச்சர் தி.மகேஷ்வரன் படுகொலைக்கு காரணம் ஈ.பி.டி.பி..

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரின் தம்பியும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் , 

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்களும் , அக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவும் மகேஸ்வரனை படுகொலை செய்வதற்கு பல தடவைகள் முயற்சித்தார்கள். 

யாழ்.காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தினுள் வைத்து சுட்டுப்படுகொலை செய்வதற்கு 2000ஆம் ஆண்டு முயற்சித்தார்கள். பின்னர் இளவாலை சென் அன்ரனிஸ் தேவாலயத்திற்கு அருகில்  தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் சுடப்பட்டார். அதில் மகேஸ்வரன் உயிர்தப்பி இருந்தார். 

அதன் பின்னர் ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி கட்சியினர் தாக்குதலை மேற்கொண்டதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதாரவாளர்களை காப்பற்ற சென்ற மகேஸ்வரன் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார். 

பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு மார்கழி மாதம் காரைநகர் சிவன் கோவில் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழாவின் போது கோயிலில் வைத்து மகேஸ்வரனை படுகொலை செய்ய முயற்சித்தார்கள். அதிலும் அவர் உயிர் தப்பி இருந்தார். அதன் பின்னரே கொழும்பில் வைத்து சுட்டுபடுகொலை செய்யப்பட்டார். 

மகேஸ்வரனை படுகொலை செய்த வசந்தன் என அழைக்கப்படும் வெலேன்ரைன் என்பவர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். பிறகு அமைப்பில் இருந்து விலகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து இயங்கினார். 

மகேஸ்வரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முரண்பாடுகள் காணப்படவில்லை. அக்கால பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி "அல்மீசா" எனும் கப்பல் ஊடாக பொருட்களை ஏற்றி இறக்கும் வியாபாரம் செய்து வந்தார். 

அதன் ஊடாக யாழில் உள்ள பிரபல வார்த்தகர்கள் நால்வருடன் நட்பு கொண்டு அவர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த வர்த்தக வியாபாரத்திற்கு வியாபர ரீதியாக மகேஸ்வரன் போட்டியாக இருந்தார். ஏற்கனவே தனி ஒரு மனிதனாக அரசியலில் ஈ.பி.டி.பி.யினருக்கு போட்டியாக இருந்தமையால் , வர்த்தக மற்றும் அரசியல் போட்டியாளனை இல்லாதொழிக்கவே மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார். 

மகேஸ்வரனை படுகொலை செய்த நபருக்கு உதவியாக வந்த அரியாலையை சேர்ந்த நபர் அன்றைய தினம் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருந்தார். அவரது சடலத்தை அறியாலைக்கு கொண்டு வர உதவியது ஈ.பி.டி.பி.யினரே. 

அதேபோன்று கொலையாளி சார்பில் சட்டத்தரணியை நியமித்தமை , சட்டத்தரணிக்கான கொடுப்பனவுகளை கொடுத்தமை அனைத்துமே ஈ.பி.டி,பி.யினர். 

எனவே மகேஸ்வரின் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை , படுகொலை செய்தமை , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை, உதவியமை என அனைத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தான். 

தற்போது எனக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளனர். போலி முகநூல்கள் ஊடாகவும் , பதிவு செய்யப்படாத  இணையத்தளங்கள் ஊடாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதுடன் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றனர். என தெரிவித்தார்.