SuperTopAds

அனுமதியின்றி கட்டப்பட்ட மதிலை இடித்து அகற்றிய யாழ்.கரவெட்டி பிரதேசசபை..

ஆசிரியர் - Editor I
அனுமதியின்றி கட்டப்பட்ட மதிலை இடித்து அகற்றிய யாழ்.கரவெட்டி பிரதேசசபை..

வடமராட்சி பகுதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி முறைகேடாகக் கட்டப்பட்டு வந்த மதில்கள் நேற்றைய தினம் புதன்கிழமை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்துடன் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை (கரவெட்டி பிரதேச சபை) எல்லைக்கு உட்பட்ட நெல்லியடி நகரம், கரணவாய் வடக்கு ஆகிய பிரதேசங்களில் இருவேறு காணி உரிமையாளர்களால் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி தொடர்ந்தும் கட்டப்பட்டு வந்த மதில்களே இடித்து அகற்றப்பட்டுள்ளன.

கரணவாய் வடக்கு நவிண்டில் பிரதேசத்தில் உள்ள மதிலொன்றும் நெல்லியடி நகர பஸ் தரிப்பிடத்தின் பின்னால் உள்ள வீடொன்றின் மதிலுமே இவ்வாறு இடித்து அகற்றப்பட்டது.சமீப காலமாக அனுமதி பெறாமல் கட்டடங்கள், மதில்கள் கட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்து வருவதாகவும், 

இதனால் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் பிரதேச சபையிடம் முறையிட்டு வந்தனர்.

இது தொடர்பில் பிரதேச சபையினரால் கடந்த ஒரு வருடமாக சம்பந்தபட்டவர்களுக்கு நேரடியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு பல்வேறு கடிதங்களும் வழங்கப்பட்டு வந்த நிலையிலும்,

அவற்றை மீறித் தொடர்ந்து முறைகேடான விதத்திலும் மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொது வீதிகளை ஆக்கிரமிக்கும் வண்ணமும் குறித்த மதில்கள் கட்டப்பட்ட காரணத்தினால் இவை இடித்து அகற்றப்பட்டதாக பிரதேச சபைத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.