SuperTopAds

யாழில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவியும் அவருக்கு உதவிய இளைஞரும் கைது..

ஆசிரியர் - Editor I
யாழில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவியும் அவருக்கு உதவிய இளைஞரும் கைது..

யாழில்  வன்முறை கும்பலை ஏவி கணவனை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும், மனைவிக்கு துணைபுரிந்த குற்றத்தில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் குடும்பஸ்தர் ஈடுபட்டு வந்துள்ளார்.   

அந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி அதிகாலை வெளிமாவட்டத்தில் இருந்து வாகனம் ஒன்றில் கோழிகள் கொண்டு வரப்பட்டு , அவருக்கு விநியோகம் செய்த பின்னர் வாகனம் திரும்பி சென்றுள்ளது.

அதன் பின்னர் வீட்டின் வெளியே சத்தம் கேட்ட போது குடும்பஸ்தர் வெளியே வந்து பார்த்த போது, வன்முறை கும்பல் ஒன்று அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.   

சத்தம் கேட்டு அவரது மனைவி வெளியே வந்த போது, வாள் முனையில் அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொள்ளையிட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது.  

வாள் வெட்டில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.  

அந்நிலையில், குடும்பஸ்தரின் கொலையை , நகைக்கான கொலையாக மாற்றவே நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்த நிலையில், கொலையானவரின் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.  

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.