SuperTopAds

ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு முற்றிலும் தவறான ஒன்று..! எங்கள் ஆதரவில் எங்களை அழிக்க முயல்கிறார்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு முற்றிலும் தவறான ஒன்று..! எங்கள் ஆதரவில் எங்களை அழிக்க முயல்கிறார்..

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தீர்மானம் எடுத்துள்ளது.

மொட்டுச் சின்னத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை களமிறக்க ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் நிறைவேற்றுக் குழு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேட்பாளர் யார் என்பதை இவ்வாரத்துக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,

மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட முன்னிலை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு தவறானதாக அமையும் போது அதனை ஏற்க முடியாது. இந்த தீர்மானத்தினால் கட்சி பிளவடையும் எனவும் எதிர்வு கூறியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழு அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது. கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற நிறைவேற்று குழு கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உட்பட அக்கட்சியின் 70 உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை களமிறக்குதல் தொடர்பிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக களமிறக்குவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது.

2022 ஆம் ஆண்டு எவ்வித நிபந்தனைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகாலமாக அவர் பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக வீழ்ச்சியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எமது ஆதரவை கொண்டு பலப்படுத்தி பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தவே முயற்சிக்கிறார். இதற்கு இடமளிக்க முடியாது.

காபந்து அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை. அத்துடன் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவரது கொள்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் கட்சி முழுமையாக இல்லாதொழியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளார்கள்.ஆகவே பெரும்பான்மையான நிலைப்பாட்டுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து தகுதியுள்ள வேட்பாளர் ஒருவர் கிடையாது.

ஆகவே நாட்டு மக்களின் நிலைப்பாடு பற்றி கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர்த்து பிறிதொரு வேட்பாளரை களமிறக்கினால் நிச்சயம் தோல்வியடைவோம்.பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். 2019 ஆம் ஆண்டு நிலைவரமே தோற்றம் பெறும் என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை மொட்டுச் சின்னத்தில் களமிறக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கலாம் அவருக்கு ஆதரவு வழங்கலாம் என்று அறிவுறுத்தினோம் ஆனால் அவர் அதற்கு மதிப்பளிக்க வில்லை.

கட்சி என்ற ரீதியில் முழுமையாக விட்டுக் கொடுத்து செயற்பட முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட 79 பேரில் 11 பேர் மாத்திரமே கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

நிறைவேற்றுக் குழு கூட்டம் நிறைவடைந்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாட்டின் ஒற்றையாட்சி, தேசிய வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டே கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளோம்.

எமது தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர் யார் என்பதை இவ்வாரத்துக்குள் அறிவிப்போம் என்றார்.