சாவகச்சோி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை கைது செய்ய முயற்சி! நுாற்றுக்கணக்கில் குவிந்த இளைஞர்கள், நள்ளிரவு தாண்டியும் நீடித்த பதற்றம்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை கைது செய்ய முயற்சி! நுாற்றுக்கணக்கில் குவிந்த இளைஞர்கள், நள்ளிரவு தாண்டியும் நீடித்த பதற்றம்..

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வந்து வாக்கு மூலம் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அழைப்பாணை வழங்கி இருந்தனர். தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னால் பொலிஸ் நிலையம் வந்து வாக்குமூலம் அளிக்க முடியாது. 

 அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு உள்ளேயும், வெளியேறும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைக்கு வெளியே நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நள்ளிரவு தாண்டியும் இளைஞர்கள் குவிந்த வண்ணம் உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு