கூட்டாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவார் மோடி! - விக்கி வாழ்த்து.
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக இன்று பதவியேற்கும் நரேந்திர மோடி அவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு கூட்டாட்சியின் கீழ் வடக்கு, கிழக்கில் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவார் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தேர்தலில் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் உங்கள் தலைமையிலான பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைப் பார்ப்பது உண்மையில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாகும். தொடர்ந்து, மூன்றாவது முறையாக நீங்கள் நாட்டை வழிநடத்தவுள்ளீர்கள்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பாகவும், இலங்கை தமிழர்கள் சார்பாகவும், உங்களது நல்லாட்சிக்கு வாக்களித்து, வரலாற்று ரீதியான பதிவைச் செய்த இந்திய மக்களுக்கும், எங்கள் மகிழ்ச்சியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உலக வல்லரசாக மாற்றுவதற்கான கருவியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் இலங்கைத் தமிழர்களின் நண்பர். நான் வட மாகாணத்தில் முதலமைச்சராக இருந்தபோது இந்தியாவிலிருந்து எமது மண்ணுக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவராக தாங்களே உள்ளீர்கள். அப்போது, குஜராத்தில் நான் சந்தித்த குஜராத்தின் சாதாரண மக்கள், நீங்கள் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த உங்களின் பதவிக்காலத்தை ஏக்கத்துடனும் பெருமிதத்துடனும் எப்படி நினைவுகூர்ந்தார்கள் என்பதை உங்களிடத்தில் குறிப்பிட்டேன்.
இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை இந்தியா உறுதி செய்யும் என்றும், அந்த இலக்குகளை அடைவதற்கு இடைவிடாது உழைக்கும் என்றும் தாங்கள் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
அந்த ஆறுதல் வார்த்தைகளை இலங்கை தமிழர்கள் இன்னும் எதிர்பார்ப்புகளுடன் நினைவுகூருகிறார்கள். மூன்றாவது தடவையாக உங்களது பதவிக்காலத்தில், உங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுப்பீர்கள் என்றும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கான உண்மையான அரசியல் அதிகாரப்பகிர்வை கூட்டாட்சி ஆட்சியின் கீழ் உறுதிப்படுத்துவார் என்றும் நம்புவோம். கடவுள் எப்பொழுதும் உன்னதத்துடன் இருக்கட்டும் என்றுள்ளது.