SuperTopAds

சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற மைத்திரியை விடமாட்டோம்!

ஆசிரியர் - Admin
சுதந்திரக் கட்சியைக் கைப்பற்ற மைத்திரியை விடமாட்டோம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை அதன் தலைவராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார். நீதித்துறை அதனை தடுத்துள்ளது. இன்று மாத்திரமல்ல, இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சியை கையகப்படுத்துவதற்கு அந்த தரப்பினருக்கு நாம் இடமளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.     

புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டம் நேற்று அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களதும் தாய் வீடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகும். கடந்த காலங்களில் அவர்கள் பல திசைகளில் பிளவடைந்திருந்தாலும், தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் எம்முடன் கைகோர்த்துள்ளனர்.

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகளால் எமது நாடு வங்குரோத்தடைந்தது. அவற்றுக்கு சில சந்தர்ப்பங்களில் நாமும் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளோம். எனவே தான் இழைத்த தவறை சரி செய்வதற்காக இந்த புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம். சு.க. தலைமையிலான கூட்டணியில் நாட்டை கட்டியெழுப்புவோம்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யக்கூடிய பலம் எம்மிடமே உள்ளது. சு.க.வின் ஆதரவின்றி எவராலும் வெற்றி பெற முடியாது. கட்சியின் உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை தலைவராக நியமிக்க முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்தார். எனினும் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை. இன்றல்ல, இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மைத்திரி தரப்பு சுதந்திர கட்சியை கையகப்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.