சர்வதேசத்தை மட்டுமே நம்பி இருக்கின்றோம்! தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 9 மாதங்களைக் கடந்தும் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் கிளிநொச்சியில் 294 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
எமது பிள்ளைகளை எம்மிடம் தரும் வரை எங்களது போராட்டம் தொடரும். இதுவரையில் பலர் எங்களை வந்து சந்தித்தார்கள். எங்களின் பிள்ளைகளின் நிலை தொடர்பில் பேசினார்கள்.
எனினும், எதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதியின் பேச்சுக்கூட எமக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது.
எமது இத்தனை நாள் போராட்டத்துக்குக் கட்டாயம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நாம் நம்புகின்றோம். அந்தத் தீர்வு கிடைக்கும்வரை காத்திருப்போம். போராட்டத்தையும் கைவிடோம்" என்று கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் 289 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
வன்முறையைத் தோற்றுவிக்கும் போராட்டங்களை விடுத்து அறவழி, அஹிம்சை வழியிலேயே நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம்.
எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும். எமக்குரிய தீர்வு கிடைக்கும்வரை நாம் போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.
சர்வதேசத்தை மட்டுமே நாம் நம்பி இருக்கின்றோம். தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டது இனப்படுகொலை. சிங்களவர்கள் காணாமல் ஆக்கப்பட்டது அரசைப் பாதுகாக்க.
எங்களுடைய போராட்டங்களைத் தடுப்பதற்கு பலர் முயற்சித்தார்கள். முயற்சித்துக்கொண்டும் இருக்கின்றார்கள். அந்த சதிச் செயல்களை நாம் சாதகமாக்கிஎமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி மட்டத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பட்சத்தில் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் நிறுவனங்கள் எம்மைச் சந்திக்கின்றன.
ஆனாலும், பயன் இல்லை என்று வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கூறினார்கள்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவில் 279 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் நாம் சர்வதேச விசாரணைகளை மட்டுமே நம்பியிருக்கின்றோம்.
கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்தோம். அதனால் எதுவித பயனும் இல்லை. எங்கள் உறவுகளைத் தாருங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை அவர்களுக்கு என்ன நடந்தது என்றுதான் கேட்கின்றோம். எங்கள் மனம் உடைந்து விட்டது.
ஒன்றை மட்டுமே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். எங்களுக்கு சர்வதேச விசாரணைகள் தேவை. அவற்றுக்காகவே காத்திருக்கின்றோம்" என்று என்று முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தெரிவித்தார்கள்.
யாழ்ப்பாணம்
யாழ்.மருதங்கேணிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் 164 ஆவது நாளை எட்டியுள்ளது.
எங்களின் பிள்ளைகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஜனாதிபதி எம் பிள்ளைகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என்கிறார்.
ஒவ்வொருவரின் கதைகளையும் கருத்துக்களையும் கேட்கும்போது எல்லாமே சந்தேகமாக இருக்கின்றது.
எங்களின் பிள்ளைகள் தேடப்பட வேண்டும். அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது எமக்குத் தெரிய வேண்டும்.
உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்" என்று யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கூறினார்கள்.
திருகோணமலை
திருகோணமலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.